2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

புலிகளுக்கு ரூ. 40 கோடியை மாற்ற முயன்றேன்: ED-யிடம் இலங்கை பெண் வாக்குமூலம்

Editorial   / 2025 செப்டெம்பர் 23 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழீ​ழ விடுதலை புலிகள் அமைப்புக்கு நிதி உதவி செய்ய வங்கிப் பணமான ரூ 40 கோடியை மாற்ற முயன்றதாக இலங்கை பெண் ஒருவர் புழல் சிறையில் இருந்தபடியே வாக்குமூலம் அளித்துள்ளார். அவரிடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருகிறது.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மும்பை கிளையில் சேமிப்புக் கணக்கில் ஹமிதா ஏ லால்ஜி என்பவர் ரூ. 40 கோடி பணம் வைத்திருந்தார். அவர் இறந்துவிட்டதால் அவருடைய வங்கிக் கணக்கு கையாளப்படாமல் இருந்தது.

இதை அறிந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த டென்மார்க்கில் வசிக்கும் உமா காந்தன் என்பவர் அந்த பணத்தை தங்கள் இயக்கத்திற்கு அபகரிக்க முடிவு செய்தாராம்.

இதற்காக அவர் அந்த பணத்தை கைப்பற்ற இலங்கைத் தமிழரான லட்சுமணன் மேரி ஃப்ரான்சிஸ்கா (45) என்பவரை இந்தியாவுக்கு அனுப்பி வைத்தார். இந்தியா வந்த அவர், போலி ஆவணங்கள் மூலம் பான் கார்டு, ஆதார் அட்டை, பாஸ்போர்ட் போன்றவற்றை பெற்றதாக சொல்லப்படுகிறது.

அவருடன் கென்னிஸ்டன் பெர்னான்டோ, பாஸ்கரன், ஜான்சன் சாமுவேல், தர்மேந்திரன், மோகன் உள்ளிட்டோர் இணைந்து ஹமிதாவிடம் பவர் ஆப் அட்டானி பெற்றதாக போலி ஆவணங்களை தயார் செய்ததாக சொல்லப்படுகிறது.

அந்த ஆவணங்களை வைத்து வங்கியில் இருந்த ஹமிதாவின் ரூ 40 கோடி பணத்தை எடுக்க முயன்றனர். இந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு சென்னையிலிருந்து பெங்களூருக்கு விமானம் மூலம் செல்ல முயன்ற லட்சுமணன் மேரி உள்ளிட்டோரை கியூ பிரிவு பொலிஸார் சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது அவர்களை சோதனை செய்த போது அவர்களிடம் போலி பாஸ்போர்ட் இருந்ததை பொலிஸார் கண்டறிந்தனர். இதையடுத்து அவர்களை கைது செய்தனர். இது தொடர்பாக கியூ பிரிவு பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதையடுத்து வழக்கின் முக்கியத்துவம் கருதி அந்த வழக்கானது தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்புக்கு வங்கியிலிருந்த ரூ. 40 கோடி பணத்தை சட்டவிரோதமாக போலி ஆவணங்களை வைத்து அபகரித்தது தொடர்பாக அமலாக்கத் துறை தற்போது விசாரணையை தொடங்கியது.

இதில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள லட்சுமணன் மேரி என்ற பெண்ணிடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்த நீதிமன்றத்தில் அனுமதி பெற்று, நேற்று புழல் சிறைக்கு சென்றனர். அங்கு அந்த பெண்ணிடம் 2 மணி நேரமாக தனி அறையில் வைத்து விசாரணை நடத்தினர்.

அப்போது பல்வேறு தகவல்களை அமலாக்கத் துறையிடம் அந்த பெண் சொல்லியதாக தெரிகிறது. இந்த நிலையில் இந்த விசாரணை இன்றும் தொடரும் என சொல்லப்படுகிறது.

நேற்று நடத்தப்பட்ட விசாரணையில் அந்த பெண் அளித்த வாக்குமூலத்தில், "ஐரோப்பிய நாடான டென்மார்க்கில் எங்கள் அமைப்பை சேர்ந்த உமா காந்தன் தங்கியுள்ளார். அவர் பிறப்பித்த கட்டளையின்படியே நாங்கள் செயல்பட்டோம்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ஹமிதாவின் சேமிப்பு கணக்கில் இருக்கும் பணத்தை விடுதலைப் புலிகள் அமைப்புக்கு மாற்ற நான் உள்பட 5 பேரை உமா காந்தன் கருவியாக பயன்படுத்தினார். அந்த பணத்தை ஆன்லைன் மூலம் பெற முயற்சித்தோம். இதற்காக போலி ஆவணங்களை வைத்து ஹமிதாவின் பெயரில் சிம்கார்டு வாங்கினோம்.

அதை பயன்படுத்தி பணத்தை எடுக்க முயன்ற போது எங்களின் திட்டம் தோல்வியில் முடிந்தது. இதனால் ஹமிதாவின் வாரிசு நான்தான் என்பது போல் சான்றிதழை தயார் செய்தோம். இந்த சான்றிதழை பயன்படுத்தி பணத்தை எங்கள் அமைப்புக்கு மாற்ற சென்னையில் இருந்து பெங்களூர் சென்று அங்கிருந்து மும்பை செல்ல இருந்தேன். ஆனால் விமான நிலையத்தில் சிக்கிக் கொண்டேன்" என லட்சுமணன் மேரி வாக்குமூலம் அளித்துள்ளார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .