Editorial / 2025 டிசெம்பர் 23 , மு.ப. 11:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் முன்னுரிமைகளை அடையாளம் கண்டு, மீளக் கட்டியெழுப்பும் அவசர தேவைகளை நிவர்த்தி செய்வதில் இந்தியா தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயற்பட உள்ளதாகவும் அதன்படி, இலங்கைக்கு 450 மில்லியன் டொலர் சலுகைப் பொதியொன்றை வழங்க நடவடிக்கை எடுப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்தார். இதில், 100 மில்லியன் டொலர் இந்திய உதவி என்பதோடு மீதமுள்ள தொகை சலுகை வட்டி வீதத்தின் அடிப்படையிலான கடனாகும்.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் தலைமையின் கீழ், இலங்கை மிக விரைவில் மீண்டு வரும் என்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளதாகத் தெரிவித்த இந்திய வெளிவிவகார அமைச்சர், இலங்கையின் மீளக்கட்டியெழுப்பும் திட்டத்துடன் இந்தியா முன்னெப்போதையும் விட அதிக அர்ப்பணிப்புடன் கைகோர்த்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (23) அன்று காலை நடைபெற்றது. இதன்போதே இந்திய வெளிவிவகார அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியினால் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட விசேட கடிதத்தையும் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதியிடம் கையளித்தார்.
டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களின் நிவாரணம் மற்றும் புனர்வாழ்வு முயற்சிகளுக்கும், இயல்பு வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கும் இந்தியப் பிரதமரும் அரசாங்கமும் அளித்த மனப்பூர்வமான ஆதரவை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நன்றியுடன் பாராட்டினார்.
மீட்புப் பணிகளுக்கு ஹெலிகொப்டர்கள்,மருந்துகள், உணவுப் பொருட்கள் உள்ளிட்ட மனிதாபிமான உதவிகளை வழங்குவதிலும், சேதமடைந்த வீதிகளை மீளமைப்பதிலும், மகியங்கனை வைத்தியசாலை உள்ளிட்ட வைத்தியசாலை கட்டமைப்பை மறுசீரமைப்பதிலும் இந்திய அரசாங்கம் அளித்த விசேட ஆதரவையும் ஜனாதிபதி நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.
ஒவ்வொரு கடினமான சமயத்திலும் இந்தியா இலங்கைக்கு வழங்கி வரும் தொடர்ச்சியான ஆதரவை ஜனாதிபதி ஞாபகமூட்டியதோடு பேரழிவுக்குப் பிறகு இலங்கையின் மீளமைப்பு செயற்பாட்டிற்கு வழங்கும் ஒத்துழைப்பு இந்திய-இலங்கை உறவுகளில் ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிக்கும் என்றும் சுட்டிக்காட்டினார்.
இந்த கடினமான சமயத்தில் இலங்கையுடன் பலமாக இணைந்திருக்கவும், இலங்கையை மீளக்கட்டியெழுப்பும் பணிகளுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளை வழங்கவும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனக்கு அறிவுறுத்தியதாகவும், அந்த முயற்சிகளை ஆராய்வதற்காக இந்தியப் பிரதமரின் விசேட பிரதிநிதியாக இலங்கைக்கு தான் விஜயம் மேற்கொண்டதாகவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இந்திய வெளிவிவகார அமைச்சருக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தைகள் ஆரம்பமானதோடு, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் விரிவுபடுத்துவதில் விசேட கவனம் செலுத்தப்பட்டது. குறிப்பாக இலங்கையின் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கு தொடர்ந்து ஆதரவு வழங்கப்படும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்தார்.
இந்தியா இலங்கைக்கு வழங்கிய சலுகைப் பொதியை அடையாளப்படுத்தும் வகையில் கிளிநொச்சி ஏ-35 வீதியில் உள்ள பேல் பாலத்தை திறந்து வைக்கும் நிகழ்வு, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இந்திய மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர்களின் பங்கேற்புடன் ஒன்லைனின் ஊடாக நடைபெற்றது.
ஜனாதிபதிக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சருக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், தொழில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான அனில் ஜயந்த பெர்னாண்டோ மற்றும் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தைகளில், இந்திய அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி இந்திய வெளிவிவகார அமைச்சின் மேலதிக செயலாளர் புனித் அக்ரவால், இந்தியப் பிரதி உயர் ஸ்தானிகர் சத்யஞ்சல் பாண்டே மற்றும் இலங்கை அரசாங்கத்தின் சார்பாக ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் அருணி ரணராஜா, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே ஆகியோர் கலந்து கொண்டனர்.
10 minute ago
11 minute ago
16 minute ago
23 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
11 minute ago
16 minute ago
23 minute ago