Mayu / 2026 மே 18 , பி.ப. 01:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
போதைப்பொருளை ஒழிப்பதற்காக தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் "முழு நாடுமே ஒன்றாக" எனும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், தம்பலகாமத்தில் இன்று (18) விசேட விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
தம்பலகாமம் பொலிஸார் மற்றும் தம்பலகாமம் பிரதேச செயலகம் இணைந்து நடத்திய இந்த நிகழ்வு, தம்பலகாமம் - கண்டி பிரதான வீதியின் சந்தி பகுதியில் நடைபெற்றது. இதன் போது, அந்த வீதி வழியாகப் பயணித்த பொது போக்குவரத்து பேருந்துகள், தனியார் வாகனங்கள் மற்றும் முச்சக்கர வண்டிகள் நிறுத்தப்பட்டு, அவற்றில் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன.

வாகனங்களில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கர்களில், போதைப்பொருள் தொடர்பான புகார்களைத் தெரிவிப்பதற்காக '1818' என்ற அவசர அழைப்பு இலக்கம் (Hotline) அச்சிடப்பட்டிருந்தது.

மேலும், போதைப்பொருள் பாவனையிலிருந்து விடுபடுவதற்கான வழிகாட்டல்கள் மற்றும் பொதுமக்களுக்கான அறிவுறுத்தல்கள் அடங்கிய வாசகங்களும் அவற்றில் இடம் பெற்றிருந்தன.

இந்த விழிப்புணர்வு நிகழ்வில் கந்தளாய் பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர், தம்பலகாமம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, திஸ்ஸபுர இராணுவ முகாமின் அதிகாரிகள், பிரதேச செயலக அதிகாரிகள் மற்றும் தேசிய அபாயகரமான ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
நாட்டில் அதிகரித்து வரும் போதைப்பொருள் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், அரசாங்கத்தின் புதிய திட்டத்தின் கீழ் இவ்வாறான விழிப்புணர்வு நடவடிக்கைகள் நாடு முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .