2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

பன்மூர் சிறுத்தைக்கு நாய் பொறி

Editorial   / 2018 ஜனவரி 05 , மு.ப. 08:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சதிஸ், எஸ்.கணேசன்

ஹட்டன், பன்மூர் தோட்டத்தில் ஏழு தொழிலாளர்களைக் காயப்படுத்திய சிறுத்தையை உயிருடன் பிடிப்பதற்கான முயற்சிகள் யாவும் தோல்வியடைந்துவிட்டன. இந்நிலையில், அந்தச் சிறுத்தை, யாருடைய கண்களிலும் தென்படாமல் தப்பியோ​டி விட்டதாக அறியமுடிகின்றது.  

சிறுத்தை தப்பியோடியமையால், அந்தத் தோட்டத்தில் ஒருவகையான பதற்றம் நிலவுவதுடன், அங்கு பெரும் அச்சமான நிலைமையொன்று காணப்படுவதாகவும் அறியமுடிகின்றது.​ தொழிலாளர்கள் நேற்றையதினம் வேலைக்குச் செல்லாமல் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.  

இதேவேளை, அத்தோட்டத்திலிருந்து பாடசாலைகளுக்குச் செல்லும் மாணவர்கள், நேற்றையதினமும் செல்லவில்லையென அறியமுடிகின்றது.   

எனினும், தப்பிச்சென்று தலைமறைவாகியிருக்கும் அந்தச் சிறுத்தையை உயிருடன் பிடிப்பதற்கான முயற்சியை, தாங்கள் கைவிடவில்லையென, வனவிலங்குக் காரியாலய அதிகாரிகள் தெரிவித்தனர்.   

இந்தச் சிறுத்தை, கடந்த 2ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2:20 மணியிலிருந்து அந்தத் தோட்டத்தில், இரவு பகலாக பெரும் அட்டகாசத்தில் ஈடுபட்டது. சிறுத்தையின் சீறி பாய்ச்சலினால், நாயொன்று பலியானதுடன், பெண் தொழிலாளி உட்பட தொழிலாளர்கள் ஏழுபேர் காயமடைந்து, வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர்.  

சிறுத்தை, நாயொன்றை கௌவிக்கொண்டு போனதை கண்ட, பெண்ணொருவர் கூச்சலிட்டுள்ளார். இந்நிலையில், திகைப்படைந்த அந்தச் சிறுத்தை, நாயை ​விட்டுவிட்டு பெண்ணைத் தாக்கியுள்ளது. அப்பெண்ணைக் காப்பாற்ற வந்தவர்களையும் ஏனைய இருவரையும் தாக்கியுள்ளது.   

இவ்வாறு அட்டகாசத்தில் ஈடுபட்ட அந்தச் சிறுத்தையைப் பிடிப்பதற்கு, வனவிலங்கு அதிகாரிகள் மேற்கொண்ட முயற்சிகள் கைகூடவில்லை. துப்பாக்கிகளின் ஊடாக, மயக்க ஊசியை ஏற்றிப் பிடிப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சியும் பயனளிக்காது போய்விட்டது.  

இந்நிலையில், அந்தச் சிறுத்தை நடமாடும் இடங்களில், வலைகளை விரித்து பிடிப்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. அந்த முயற்சியும் கைகூடவில்லை.   

சிறுத்தையை பிடிக்காமையால், தொழிலாளர்கள் பெரும் அச்சமடைந்தனர். வனவிலங்கு அதிகாரிகளுடனும் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டனர். எனினும், தங்களுடைய திட்டங்களை மாற்றிக்கொண்ட வனவிலங்கு அதிகாரிகள், பாரிய இரும்புக் கூடுகளைக் கொண்டுவந்து வைத்து, அதற்குள் நாய்களை விட்டு, சிறுத்தையை உயிரிருடன் பிடிப்பதற்காகக் காத்திருந்தனர்.  
அந்தக் காத்திருப்புகள் எல்லாம் கைகூடாமையால், இறுதியில், சிறுத்​தையை அச்சுறுத்துவதற்காக, புதன்கிழமை

இரவு யானை வெடிகளையும் கொளுத்திப் போட்டுள்ளனர். அந்தச் சத்தத்துக்கு, சிறுத்தை தப்பியோடியிருக்கலாம் என்று வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.  

எது எவ்வாறோ, சிறுத்தையை உயிருடன் பிடிக்கும் வரையிலும் தங்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சம் நீங்காது என்று தெரிவித்துள்ள அத்தோட்டத்தைச் சேர்ந்த மக்கள், தோட்ட நிர்வாகத்தின் அசமந்த போக்கையும் கண்டித்துள்ளனர்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .