2026 ஏப்ரல் 03, வெள்ளிக்கிழமை

ஆர்சனல், லிவர்பூல் வெற்றி

Shanmugan Murugavel   / 2016 பெப்ரவரி 15 , மு.ப. 01:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக்கின் கடந்த ஞாயிற்றுக்கிழமை (14) இடம்பெற்ற போட்டிகளில், ஆர்சனல், லிவர்பூல், டொட்டேன்ஹாம் ஆகிய அணிகள் வெற்றி பெற்றுள்ளன.

ஆர்சனல், லெய்செஸ்டர் சிற்றி ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், 2-1 என்ற கோல்கணக்கில் ஆர்சனல் வெற்றி பெற்றது. இப்போட்டியின் முதற்பாதியின் இறுதி நிமிடத்தில் லெய்செஸ்டர் சிற்றிக்கு கிடைத்த பெனால்டியை ஜேமி வர்டி கோலாக்கியிருந்தார். பின்னர் மாற்றுவீரராக களமிறங்கிய தியோ வொல்கோட், போட்டியின் 70ஆவது நிமிடத்திலும் போட்டியின் இறுதி நிமிடத்தில், கடந்த ஏப்ரலுக்கு பின், முதற்தடவையாக களமிறங்கிய டனி வெல்பெக் பெற்ற கோலின் மூலம் ஆர்சனல் வெற்றி பெற்றது. இப்போட்டியில் ஆர்சனல் வெற்றி பெற்ற போதும், இங்கிலாந்து பிறீமியர் லீக் அணிகளுக்கான புள்ளிகள் தரவரிசைப்பட்டியலில் லெய்செஸ்டர் சிற்றியே முன்னிலை வகிக்கின்றபோதும் அவ்வணிக்கும் தமக்குமிடையிலான இடைவெளியை 2 புள்ளிகளாக ஆர்சனல் குறைத்துக் கொண்டுள்ளது.

இதேவேளை, லிவர்பூல், அஸ்டன் வில்லா ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், 6-0 என்ற கோல்கணக்கில் லிவர்பூல் வெற்றி பெற்றது. அவ்வணி சார்பாக, போட்டியின் 16ஆவது, 25ஆவது, 58ஆவது, 63ஆவது, 65ஆவது, 71ஆவது நிமிடங்களில் முறையே டானியல் ஸ்டூரிட்ஜ், ஜேம்ஸ் மில்நர், எம்ரி கான், டிவோக் ஒரிஜி, நதானியல் கிளைன், கோலோ தோரே ஆகியோர் கோல்களைப் பெற்றிருந்தனர்.

இது தவிர, டொட்டேன்ஹாம், மன்செஸ்டர் சிற்றி ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், 2-1 என்ற கோல்கணக்கில் டொட்டேன்ஹாம் அணி வெற்றி பெற்றது. அவ்வணி சார்பாக, போட்டியின் 53ஆவது நிமிடத்தில் கிடைக்கப்பெற்ற பெனால்டி மூலம் ஹரி கேன் ஒரு கோலினைப் பெற்றதோடு, போட்டியின் 83ஆவது நிமிடத்தில் கிறிஸ்டியான் எரிக்சன் பெற்ற வெற்றிக்கோலோடு அவ்வணி வெற்றி பெற்றது. மன்செஸ்டர் சிற்றி சார்பாக பெறப்பட்ட கோலை, போட்டியின் 74ஆவது நிமிடத்தில் கெலெச்சி லெகன்ஜோ பெற்றிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .