2025 மே 23, வெள்ளிக்கிழமை

இங்கிலாந்துக்கெதிரான தொடரை இழந்த இலங்கை

Shanmugan Murugavel   / 2021 ஜூன் 25 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்துக்கு எதிரான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரை இலங்கை இழந்துள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் நேற்றிரவு இரண்டாவது போட்டியிலும் தோல்வியடைந்தமையைத் தொடர்ந்தே இன்னும் ஒரு போட்டி இருக்கத் தக்கதாகவே தொடரை இலங்கை இழந்துள்ளது.

இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கை அணியின் தலைவர் குசல் பெரேரா, தமதணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார்.

இலங்கை சார்பாக கடந்த போட்டியில் விளையாடிய தனஞ்சய டி சில்வா, நுவான் பிரதீப்பை நிரோஷன் டிக்வெல்ல, பினுர பெர்ணான்டோ ஆகியோர் பிரதியிட்டிருந்தனர்,

இங்கிலாந்து சார்பாக கடந்த போட்டியில் விளையாடிய ஜொஸ் பட்லர், கிறிஸ் வோக்ஸை சாம் பில்லிங்ஸும், டேவிட் வில்லியும் பிரதியிட்டிருந்தனர்.

இந்நிலையில், முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய இலங்கை, ஆரம்பம் முதலே வரிசையாக சாம் கர்ரன் (1), அடில் ரஷீட் (2), மார்க் வூட் (2), கிறிஸ் ஜோர்டானிடம் (1) விக்கெட்டுகளைப் பறிகொடுத்து, 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 111 ஓட்டங்களையே பெற்றது. துடுப்பாட்டத்தில், குசல் மென்டிஸ் 39 (39), இசுரு உதான ஆட்டமிழக்காமல் 19 (14) ஓட்டங்களைப் பெற்றனர்.

பதிலுக்கு, 112 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து, ஆரம்பத்தில் ஜொனி பெயார்ஸ்டோ, டேவிட் மலன், ஒய்ன் மோர்கன், ஜேஸன் றோயை பினுர பெர்ணான்டோ, துஷ்மந்த சமீர, இசுரு உதான, வனிடு ஹஸரங்கவிடம் பறிகொடுத்து தடுமாறியது.

எனினும், அதன் பின்னர் ஜோடி சேர்ந்த பில்லிங்ஸ், லிவிங்ஸ்டோனின் இணைப்பாட்டத்தில் மீண்டு மழை ஆட்டத்தை இடைநிறுத்தியபோது 12 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 69 ஓட்டங்களைப் பெற்றவாறு காணப்பட்டிருந்தது.

பின்னர் டக்வேர்த் லூயிஸ் ஸ்டேர்ண் முறைப்படி 18 ஓவர்களில் 103 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், 24 (29) ஓட்டங்களுடன் பில்லிங்ஸை ஹஸரங்கவிடம் இழந்தபோதும், 16.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் இங்கிலாந்து வெற்றியிலக்கையடைந்தது. லிவிங்ஸ்டோன் ஆட்டமிழக்காமல் 29 (26), சாம் கர்ரன் ஆட்டமிழக்காமல் 16 (08) ஓட்டங்களைப் பெற்றிருந்தனர்.

இப்போட்டியின் நாயகனாக லிவிங்ஸ்டோன் தெரிவானார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X