Gopikrishna Kanagalingam / 2015 டிசெம்பர் 07 , மு.ப. 09:35 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்திய, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி, 3-0 என்ற கணக்கில் வெற்றிகொண்டு, தொடரைக் கைப்பற்றியது. நாக்பூரில் இடம்பெற்றுவந்த நான்காவதும் இறுதியுமான போட்டியை வெற்றிகொண்டே, அவ்வணிக்கு இவ்வெற்றி கிடைத்தது.
72 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 72 ஓட்டங்களுடன் நேற்றைய நாளை ஆரம்பித்த தென்னாபிரிக்க அணி, குறைந்தது 90 ஓவர்களைத் தடுத்தாடும் எண்ணத்துடன் களமிறங்கியது.
எனினும், ஐந்தாவது நாளில், 12.3 ஓவர்களில் 4 ஓட்டங்கள் பெறப்பட்ட நிலையில், ஹஷிம் அம்லா ஆட்டமிழந்தார். எனினும், தென்னாபிரிக்க அணி தொடர்ந்தும் போராடியது. மதியபோசன இடைவேளையின்போது, 107 ஓவர்களை எதிர்கொண்டிருந்த தென்னாபிரிக்க அணி, 3 விக்கெட்டுகளை இழந்து 94 ஓட்டங்களுடன் காணப்பட்டது.
தொடர்ந்து விக்கெட்டுகள் வீழ்த்தப்பட, 139ஆவது ஓவரின் 5ஆவது பந்தில் விலாஸ் ஆட்டமிழக்க, 2 பந்துகளின் பின்னர் ஏபி டி வில்லியர்ஸ் ஆட்டமிழந்தமை, தென்னாபிரிக்காவின் முடிவை உறுதிப்படுத்தியது. அவ்வணி இறுதியில், 143.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 143 ஓட்டங்களைப் பெற்றுத் தோல்வியடைந்தது.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், 100 ஓவர்களுக்கும் அதிகமாகத் துடுப்பெடுத்தாடிய அணியொன்று பெற்ற, மிகக்குறைவான ஓட்ட வீதமாக, தென்னாபிரிக்க அணியின் 0.99 என்ற ஓட்ட வீதம் பதிவானது.
தென்னாபிரிக்கா சார்பாகப் போராடிய ஏபி டி வில்லியர்ஸ், உடற்தகுதிப் பிரச்சினைகளுக்கு மத்தியிலும், பந்து கைகளைத் தாக்கியமைக்கு மத்தியிலும் போராடினார். 297 பந்துகளை எதிர்கொண்ட அவர், 43 ஓட்டங்களைப் பெற்றார். தவிர, ஹஷிம் அம்லா 244 பந்துகளில் 25 ஓட்டங்களையும் தெம்ப பவுமா 117 பந்துகளில் 34 ஓட்டங்களையும் ஃபப் டு பிளெஸிஸ் 97 பந்துகளில் 10 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில், இரவிச்சந்திரன் அஷ்வின் 5, உமேஷ் யாதவ் 3, ரவீந்திர ஜடேஜா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 334 ஓட்டங்களையும், தென்னாபிரிக்க அணி முதல் இனிங்ஸில் 121 ஓட்டங்களையும் பெற்றதோடு, இந்திய அணி தனது இரண்டாவது இனிங்ஸில், 5 விக்கெட்டுகளை இழந்து 267 ஓட்டங்களைப் பெற்று, 481 ஓட்டங்களை இலக்காக வழங்கியிருந்தது.
இப்போட்டியின் நாயகனாக, இரண்டு இனிங்ஸ்களிலும் சதம் பெற்ற அஜின்கியா ரஹானே தெரிவானார். தனது, போட்டியின் நாயகன் விருதை, சென்னை வெள்ளத்தால் அவதிப்படும் சென்னை மக்களுக்கும், நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுவரும் இராணுவத்தினருக்கும் சமர்ப்பிப்பதாக, ரஹானே இதன்போது தெரிவித்தார்.
இத்தொடரின் நாயகனாக, இரவிச்சந்திரன் அஷ்வின் தெரிவானார்.
1 hours ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
3 hours ago