2026 ஏப்ரல் 01, புதன்கிழமை

உடற்றகுதிச் சோதனைக்கு மலிங்க அழைப்பு

Shanmugan Murugavel   / 2016 ஏப்ரல் 17 , பி.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கவுக்கு, உடற்றகுதிச் சோதனையொன்றில் பங்குபற்றுமாறு, இலங்கை கிரிக்கெட் சபையால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தியன் பிறீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடரில் பங்குபற்றுவதற்காக அவர் இந்தியாவுக்குச் சென்றுள்ள நிலையிலேயே, இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக உடற்றகுதிப் பிரச்சினைகளால் அவதியுறும் லசித் மலிங்க, ஆசியக் கிண்ணப் போட்டிகளில் ஒரேயொரு போட்டியில் மாத்திரம் பங்கேற்றிருந்ததோடு, அதன் பின்னர் இடம்பெற்ற உலக இருபதுக்கு-20 தொடரில், எந்தவொரு போட்டியிலும் பங்கேற்றிருக்காததோடு, முதலாவது போட்டி நிறைவுபெற்றதும், உடற்றகுதியின்மை காரணமாக அத்தொடரிலிருந்து விலகியிருந்தார்.

எனினும், ஏப்ரல் 9ஆம் திகதி ஆரம்பமான ஐ.பி.எல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காகத் தெரிவுசெய்யப்பட்ட அவர், அவ்வணி சார்பாகப் போட்டிகளில் பங்குபற்றுவாரா என்ற எதிர்பார்ப்புக் காணப்பட்டது.
இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் குழாமோடு, கடந்த வெள்ளிக்கிழமை இணைந்த லசித் மலிங்க, இத்தொடரின் இரண்டாவது பாதியில் விளையாடுவதற்கான உடற்றகுதியைப் பெறும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார்.

ஐ.பி.எல் போன்ற தனியார் தொடர்களில் பங்குபெறுவதற்கு, ஒரு வீரர் பிரதிநிதித்துவப்படுத்தும் நாட்டின் கிரிக்கெட் சபை, அனுமதிச் சான்றிதழை வழங்க வேண்டுமென்பது விதியாகும். எனினும், அந்தச் சான்றிதழை இலங்கை கிரிக்கெட் சபை வழங்குமா என்பதில் சந்தேகம் நிலவியது. குறிப்பாக, தற்போதைய பிரதம தேர்வாளரான அரவிந்த டி சில்வா, லசித் மலிங்கவின் அர்ப்பணிப்புக் குறித்துக் கேள்விகளை எழுப்புவதுபோல் சில கருத்துகளைத் தெரிவித்ததோடு, ஐ.பி.எல் தொடருக்காக அவர் உடற்றகுதியை அடைந்துவிடுவார் என்றவாறான கேலியான கருத்துகளை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையிலேயே, இலங்கை கிரிக்கெட் சபையால் நியமிக்கப்பட்டுள்ள நிபுணத்துவமிக்க வைத்தியர்கள் குழாமொன்றின் முன்னால் ஆஜராகுமாறு, லசித் மலிங்கவுக்கு இன்று அழைப்பு விடுக்கப்பட்டது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .