Shanmugan Murugavel / 2016 மே 15 , மு.ப. 06:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியன் பிறீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடரின் இறுதிக் கட்டத்துக்குப் போட்டிகள் வந்துள்ள நிலையில், முக்கியமான முடிவுகள் பல எட்டப்பட்டு வருகின்றன. இதில், நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற இரண்டு போட்டிகளுமே, ஐ.பி.எல் வரலாற்றில் மறக்க முடியாத போட்டிகளாக மாறிப்போயின.
சனிக்கிழமை இடம்பெற்ற முதலாவது போட்டியில், றோயல் சலஞ்சர்ஸ் பெங்க;ர் அணியும் குஜராத் லயன்ஸ் அணியும் மோதியிருந்தன. இப்போட்டியில், குஜராத் அணியின் தலைவர் சுரேஷ் ரெய்னா பங்கேற்றிருக்கவில்லை. அவரது மனைவிக்குக் குழந்தைப் பேறுக்காக, நெதர்லாந்துக்குச் சென்றிருந்ததாலேயே, இப்போட்டியில் அவர் பங்கேற்றிருக்கவில்லை.
ஐ.பி.எல் ஆரம்பித்தது முதல், சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிவந்த ரெய்னா, அவ்வணிக்குத் தடை விதிக்கப்பட்டதையடுத்தே, இம்முறை குஜராத் அணிக்காக விளையாடியிருந்தார். இதுவரை காலமும், ஐ.பி.எல் தொடரின் எந்தவொரு போட்டியையும் தவறவிட்டிருக்காத அவர், 9ஆவது ஆண்டிலேயே முதலாவது போட்டியைத் தவறவிட்டிருந்தார்.
அவர் தவறவிட்ட போட்டி என்பதைத் தவிர, விராத் கோலியும் ஏபி.டி வில்லியர்ஸூம் இணைந்து, தாண்டவமாடிய போட்டியாகவும் இது அமைந்திருந்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய பெங்களூர் அணி சார்பாக டி வில்லியர்ஸ் 52 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 129 ஓட்டங்களைக் குவிக்க, விராத் கோலியோ, 55 பந்துகளில் 109 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். ஒட்டுமொத்த இருபதுக்கு-20 வரலாற்றில், ஒரே போட்டியில் இரண்டு வீரர்கள், சதங்களைப் பெற்றமை, இரண்டாவது தடவையாகும். இதற்கு முன்னர், 2011ஆம் ஆண்டில் குளொசெஸ்டெர்ஷெயார் அணிக்காக கெவின் ஓ பிரையன், ஹேமிஷ் மார்ஷல் இருவரும் சதம் பெற்றிருந்தனர். தவிர, டி வில்லியர்ஸ், கோலி இருவரும் இணைந்து, 229 ஓட்டங்களைப் பகிர்ந்து, இருபதுக்கு-20 போட்டிகளின் மிகப்பெரிய இணைப்பாட்டம் என்ற அவர்களின் சாதனையை (பிரிக்கப்படாத 215 ஓட்டங்கள்), சனிக்கிழமையன்று முறியடித்திருந்தனர்.
அத்தோடு, இப்போட்டியை பெங்களூர் அணி 144 ஓட்டங்களால் வென்றிருந்த நிலையில், ஐ.பி.எல் வரலாற்றில், மிகப்பெரிய ஓட்ட வித்தியாசத்தால் பெறப்பட்ட வெற்றி என்ற சாதனையும் படைக்கப்பட்டது. முதலாவது ஐ.பி.எல் போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பிரென்டன் மக்கலத்தின் அதிரடிச் சதத்தின் உதவியுடன், பெங்களூர் அணிக்கெதிராக பெற்ற 140 ஓட்டங்களே, இதுவரையிலான சாதனையாக இருந்தது.
ரெய்னா தலைமையிலான குஜராத் அணிக்கெதிரான சாதனைகள் இவ்வாறிருக்க, ரெய்னாவின் தலைவராக சென்னையில் இருந்த மகேந்திரசிங் டோணியின் அணியும், மோசமான வரலாற்றைப் படைத்துக் கொண்டது.
டோணி தலைமையிலும் ஸ்டீபன் பிளமிங்கின் பயிற்றுவிப்பிலும் சென்னை அணி சிறப்பான பெறுபேறுகளைப் பெற்ற போதிலும், அவர்களின் வழிகாட்டலில் களமிறங்கிய றைசிங் பூனே சுப்பர்ஜையன்ட்ஸ் அணி, கொல்கத்தா அணியுடன் இடம்பெற்ற போட்டியில் தோல்வியடைந்து, இவ்வாண்டுக்கான போட்டிகளில், இறுதிக்கட்டப் போட்டிகளுக்குத் தகுதிபெறாமல் வெளியேற்றப்படும் முதலாவது அணியாக மாறியது. இதன்படி, டோணி தலைமையிலான அல்லது பிளமிங்கின் பயிற்றுவிப்பிலான அணியொன்று, ஐ.பி.எல் இறுதிக்கட்டப் போட்டிகளில் பங்குபற்றாத முதற்சந்தர்ப்பமாக, இம்முறை இடம்பெறவுள்ள இறுதிக்கட்டப் போட்டிகள் அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .