Shanmugan Murugavel / 2016 மார்ச் 15 , பி.ப. 01:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை இருபதுக்கு-20 அணியின் முன்னாள் தலைவரும் அவ்வணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளருமான லசித் மலிங்க, சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று ஆரம்பமான உலக இருபதுக்கு-20 தொடருக்கான இலங்கைக் குழாமில் சேர்க்கப்பட்டமை தொடர்பாகக் கடுமையான விமர்சனங்களை வெளியிட்டமை காரணமாக இந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கடந்தாண்டு இறுதியிலிருந்து முழங்கால் உபாதையால் அவதிப்பட்டுவரும் லசித் மலிங்க, சத்திரசிகிச்சையும் மேற்கொண்டிருந்தார். அதன் பின்னர், இம்மாதம் ஆரம்பித்த ஆசியக் கிண்ணப் போட்டிகளுக்கான இலங்கை அணியின் தலைவராக அவர் சேர்க்கப்பட்டார். ஆனால், அத்தொடரில் ஒரேயொரு போட்டியில் மாத்திரமே அவரால் விளையாட முடிந்தது.
அந்தத் தொடரின் பின்னர், உலக இருபதுக்கு-20 தொடரில் அவர் விளையாடுவாரா, இல்லையா என்பது தொடர்பான சந்தேகம் காணப்பட்ட நிலையில், அரவிந்த டி சில்வா தலைமையில் குமார் சங்கக்கார, ரொமேஷ் களுவிதாரண அடங்கிய 5 பேர் கொண்ட தேர்வுக்குழு, அத்தொடருக்காக லசித் மலிங்கவைத் தெரிவு செய்தது. இதனால் அவர், நேற்று முன்தினம் இந்தியாவைச் சென்றடைந்தார்.
இந்நிலையில் கருத்துத் தெரிவித்துள்ள லசித் மலிங்க, 'உடற்றகுதியுடன் நான் இல்லாத காரணத்தால், என்னைச் சேர்க்க வேண்டாமென நான் தேர்வாளர்களிடம் தெரிவித்தேன். ஆசியக் கிண்ணப் போட்டிகளுக்கு முன்னரும் தெரிவித்தேன், உலக இருபதுக்கு-20 தொடருக்கு முன்னரும் நான் தெரிவித்தேன். ஆனால், அவர்கள் என்னைத் தெரிவுசெய்துள்ளார்கள். 70 சதவீதம் கூட நான் உடற்றகுதியுடன் இல்லை" என அவர் தெரிவித்தார்.
குமார் சங்கக்காரவுடன் இணைந்து விளையாடிய லசித் மலிங்க, உலக இருபதுக்கு-20 தொடரை 2014ஆம் ஆண்டு இலங்கை வென்றபோது, குமார் சங்கக்காரவின் தலைவராகவும் செயற்பட்டிருந்தார். இந்நிலையிலேயே தற்போது, குமார் சங்கக்கார உள்ளடங்கியிருக்கும் தெரிவாளர்கள் மீது கடுமையான விமர்சனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
'இளைய வீரரொருவருக்கு ஏன் சந்தர்ப்பத்தை வழங்கக்கூடாது? நான் காயமடைந்திருக்கிறேன். என்னால் விளையாட முடியாது என்றால் என்னால் விளையாட முடியாது, அவ்வளவும் தான். காயத்துடன் நான் விளையாட வேண்டுமென அவர்கள் எண்ணுகிறார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை" என்றார்.
இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகள் 62இல் பங்குபற்றியுள்ள லசித் மலிங்க, 78 விக்கெட்டுகளைக் கைப்பற்றி, அப்பட்டியலில் 4ஆவது இடத்தில் உள்ளதோடு, உலக இருபதுக்கு-20 தொடரில் 30 போட்டிகளில் பங்குபற்றி 38 விக்கெட்டுகளைக் கைப்பற்றி, அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வீரராக உள்ளார்.
எனினும், வீரரொருவரது சாதனைகள் என்னவாக இருப்பினும், ஆடுகளத்தில் எவ்வாறு விளையாடுகிறார்கள் என்பதிலேயே தங்கியிருப்பதாகத் தெரிவித்துள்ள லசித் மலிங்க, அணியால் வேண்டப்படும் ஒன்றை வழங்க முடியாதெனில், அணியில் இருப்பதில் பிரயோசனம் கிடையாது எனவும் தெரிவித்துள்ளார்.
இலங்கை அணியின் முதலாவது போட்டி நாளை மறுதினம் இடம்பெறவுள்ள நிலையில், அதற்கு முன்னர் வலைப்பயிற்சிகளில் பந்து வீசவுள்ளதாகத் தெரிவித்த லசித் மலிங்க, முதலாவது போட்டியில் பங்குபற்ற உடற்றகுதி கிடைக்கவில்லையெனில், மாற்று வீரரொருவரை அணியில் சேர்க்குமாறு கோரவுள்ளதாகத் தெரிவித்தார்.
தேர்வாளர்கள் மீதான பகிரங்க விமர்சனம், மாற்று வீரர் போன்றவற்றைக் குறிப்பிட்டமை, இத்தொடருடன் ஓய்வுபெறவுள்ளார் என முன்னர் சமிக்ஞைகளை வெளியிட்டமை ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு, சர்வதேசப் போட்டிகளிலிருந்து லசித் மலிங்க ஓய்வுபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .