2026 ஏப்ரல் 06, திங்கட்கிழமை

கோப்பா அமெரிக்கா: இறுதியில் சிலி

Shanmugan Murugavel   / 2016 ஜூன் 23 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

கோப்பா அமெரிக்கா தொடரின் 100ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஐக்கிய அமெரிக்காவில் இடம்பெற்றுவரும் சிறப்புத் தொடரின் இறுதிப் போட்டிக்கு, தற்போதைய கோப்பா அமெரிக்கா சம்பியன்களான சிலி தகுதி பெற்றுள்ளது.

சிலி, கொலம்பியா அணிகளுக்கிடையே நேற்று இடம்பெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், 2-0 என்ற கோல்கணக்கில் கொலம்பியாவைத் தோற்கடித்தே இறுதிப் போட்டிக்கு சிலி தகுதி பெற்றுள்ளது.

இப்போட்டியின் ஏழாவது நிமிடத்தில், கொலம்பியாவின் முன்கள வீரரான குவான் குவாட்ராடோ தலையால் முட்டிய பந்து, சிலியின் சார்லஸ் அரங்கீஸிடம் செல்ல, அவர் இலகுவாக கொலம்பிய கோல்காப்பாளர் டேவிட் ஒஸ்பினாவைக் கடந்து கோலாக்க, சிலி முன்னிலை பெற்றிருந்ததோடு, அடுத்த நான்காவது நிமிடத்தில், அலெக்ஸில் சஞ்சேஸ் அடித்த பந்து, கோல்கம்பத்தில் பட்டு திரும்பி வர, கோல்கம்பத்துக்கு நெருங்கிய எல்லையிலிருந்த ஜோஸெப் பேதுரோ ஃபுன்சலிடா, அதைக் கோலாக்க 2-0 என்ற கோல்கணக்கில் முன்னிலை பெற்ற சிலி, குறித்த கோல் எண்ணிக்கையுடனேயே போட்டியை முடித்துக் கொண்டிருந்தது.

பலத்த மழை மற்றும் மின்னல் தாக்க அச்ச காரணமாக, முதற்பாதி முடிவடைந்து, இரண்டு மணித்தியாலங்களின் பின்னரே இரண்டாவது பாதி ஆரம்பித்திருந்த நிலையில், பின்னர் தொடர்ந்த ஆட்டத்தில், ஈரமான மைதான நிலைமைகள் காரணமாக, இரண்டு அணிகளினதும் வீரர்களும் பெருத்த சிரமத்தை எதிர்நோக்கியிருந்தனர். இரண்டாவது பாதியில் கோல்களைப் பெற்று போட்டியை சமநிலையில் முடிக்க கொலம்பியா முயன்றிருந்த போதும், போட்டியின் 57ஆவது நிமிடத்தில், இரண்டாவது தடவையாக மஞ்சள் அட்டை காட்டப்பெற்றதால், சிவப்பு அட்டை காட்டப்பெற்று கொலம்பியாவின் கார்லோஸ் சஞ்சேஸ் மைதானத்திலிருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், இது கொலம்பியாவுக்கு பெருத்த அடியாக அமைந்திருந்தது.

இப்போட்டியில் விளையாடியதன் மூலம், சிலி சார்பாக தனது 100ஆவது போட்டியில் விளையாடிய அலெக்ஸிஸ் சஞ்சேஸ், சிலி சார்பாக 100 போட்டிகளில் விளையாடிய இரண்டாவது வீரராக தன்னைப் பதிவு செய்து கொண்டார். 2006ஆம் ஆண்டு ஏப்ரல் 27ஆம் திகதி சிலிக்கான தனது அறிமுகத்தை மேற்கொண்ட சஞ்சேஸ், இதுவரையில் 34 கோல்களைப் பெற்று, சிலி சார்பாக அதிக கோல்கள் பெற்றவர்களிலும் இரண்டாமிடத்தில் இருக்கின்றார்.

இந்நிலையில், இலங்கை நேரப்படி, எதிர்வரும் திங்கட்கிழமை (27) அதிகாலை 5.30மணிக்கு இடம்பெறவுள்ள போட்டியில், கடந்த வருடம் இடம்பெற்ற கோப்பா அமெரிக்கா இறுதிப் போட்டியில் மோதிய, சிலியும் ஆர்ஜென்டினாவுமே இம்முறையும் மோதவுள்ளன. கடந்த வருடம் இடம்பெற்ற இறுதிப்போட்டியில், பெனால்டியில், 4-1 என்ற கணக்கில் சிலி வெற்றி பெற்று சம்பியனாகியிருந்தது.

இதேவேளை, எதிவரும் ஞாயிற்றுக்கிழமை (26) அதிகாலை 5.30மணிக்கு இடம்பெறவுள்ள மூன்றமிடத்துக்கான போட்டியில், கொலம்பியாவும் அமெரிக்காவும் மோதவுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .