Shanmugan Murugavel / 2016 ஏப்ரல் 03 , பி.ப. 05:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலக இருபதுக்கு-20 தொடரின் ஆண்கள், பெண்கள் தொடர்களுக்கான சம்பியன்களாக, மேற்கிந்தியத் தீவுகள் அணி தெரிவாகியுள்ளது. அவுஸ்திரேலியாவுக்கெதிரான இறுதிப் போட்டியை வெற்றிகொண்டு பெண்கள் தொடரிலும் இங்கிலாந்துக்குக்கெதிரான போட்டியை வெற்றிகொண்டு ஆண்கள் சம்பியன்களாகவும் மேற்கிந்தியத் தீவுகள் அணி தெரிவாகியது. இரண்டு போட்டிகளும் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இடம்பெற்றது.
ஆண்களுக்கான போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி, முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலந்து அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 155 ஓட்டங்களைப் பெற்றது. 3 விக்கெட்டுகளை இழந்து 23 ஓட்டங்களுடன் தடுமாறிய அவ்வணி, பின்னர் சிறப்பாக ஆடிய போதிலும், பின்னர் மீண்டும் விக்கெட்டுகளை இழந்திருந்தது.
துடுப்பாட்டத்தில் ஜோ றூட் 54 (36), ஜொஸ் பட்லர் 36 (22), டேவிட் வில்லி 21 (14) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் கார்லொஸ் பிறெத்வெய்ட், டுவைன் பிராவோ இருவரும் தலா 3, சாமுவேல் பத்ரி 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
156 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, 19.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து, வெற்றி இலக்கை அடைந்தது. ஆரம்பத்தில் கிறிஸ் கெயில் உட்பட அணியின் முன்னணி 3 வீரர்களை இழந்து, 11 ஓட்டங்களுடன் தடுமாறிய அவ்வணி, அதன் பின்னர் 4ஆவது விக்கெட்டுக்காக 75 ஓட்டங்களைப் பகிர்ந்தது. ஆனால், பின்னர் விக்கெட்டுகளை மீண்டும் இழந்து, 4.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் கைவசமிருக்கும் நிலையில் 47 ஓட்டங்களைப் பெற வேண்டியிருந்தது. பின்னர், இறுதி ஓவரில் 19 ஓட்டங்கள் பெறப்பட வேண்டியிருக்க, ஸ்டோக்ஸ் வீசிய அந்த ஓவரின் முதல் 4 பந்துகளே ஆறு ஓட்டங்களுக்கு விளாசப்பட்டன.
துடுப்பாட்டத்தில் மார்லன் சாமுவேல்ஸ் ஆட்டமிழக்காமல் 85 (66), கார்லொஸ் பிறெக்வெய்ட் ஆட்டமிழக்காமல் 34 (10), டுவைன் பிராவோ 25 (27) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் டேவிட் வில்லி 3, ஜோ றூட் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இப்போட்டியின் நாயகனாக மார்லன் சாமுவேல்ஸ் தெரிவானதோடு, தொடரின் நாயகனாக விராத் கோலி தெரிவானார்.
முன்னதாக இடம்பெற்ற பெண்களுக்கான போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த அவுஸ்திரேலிய அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 148 ஓட்டங்களைப் பெற்றது. முதலாவது விக்கெட் 5 ஓட்டங்களுக்கு இழக்கப்பட்ட போதிலும், இரண்டாவது விக்கெட்டுக்காக 77 ஓட்டங்கள் பகிரப்பட, அவுஸ்திரேலிய அணி சிறப்பான நிலையை அடைந்தது. எனினும், இறுதி ஓவரில், அவ்வணி சார்பாக 2 விக்கெட்டுகள் இழக்கப்பட்டு, ஓர் ஓட்டம் மாத்திரமே பெறப்பட்டமை, பாதிப்பாக அமைந்தது.
துடுப்பாட்டத்தில் எலீஸ் விலானி 52 (37), அணித்தலைவி மெக் லனிங் 52 (49), எலீஸ் பெரி 28 (23) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் டேன்ட்ரா டொட்டின் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
149 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, 19.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. அவ்வணிக்காக முதலாவது விக்கெட்டுக்காக 15.4 ஓவர்களில் 120 ஓட்டங்கள் குவிக்கப்பட்ட நிலையில், அவ்வணியின் வெற்றி இலகுவாக்கப்பட்டது.
துடுப்பாட்டத்தில் ஹேலி மத்தியூஸ் 66 (45), அணித்தலைவி ஸ்டபானி டெய்லர் 59 (57) ஓட்டங்களைப் பெற்றனர்.
இப்போட்டியின் நாயகியாக, ஹேலி மத்தியூஸ் தெரிவானார். தொடரின் நாயகியாக, மேற்கிந்தியத் தீவுகளின் தலைவி ஸ்டபானி டெய்லர் தெரிவானார்.
அவுஸ்திரேலிய, மேற்கிந்தியத் தீவுகள் அணி, இதற்கு முன்னர் இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளில் 8 தடவைகள் சந்தித்திருந்த நிலையில், அந்த 8 போட்டிகளிலும் அவுஸ்திரேலிய அணியே வெற்றிபெற்றிருந்த நிலையில், அவ்வணிக்கெதிரான முதலாவது வெற்றி, சம்பியன் பட்டத்தைப் பெற்றுக் கொடுத்த வெற்றியாக அமைந்தது. நடப்புச் சம்பியன்களான அவுஸ்திரேலிய அணி, தொடர்ச்சியாக நான்காவது தடவையாக இக்கிண்ணத்தை வெல்லும் வாய்ப்பை இழந்தது.
இந்த வெற்றிகளின் மூலம், 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணம், உலக இருபதுக்கு-20 தொடரின் ஆண்கள், பெண்கள் ஆகியவற்றின் சம்பியன்களாக மேற்கிந்தியத் தீவுகள் அணி காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
10 minute ago
14 minute ago
55 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
14 minute ago
55 minute ago
1 hours ago