Shanmugan Murugavel / 2016 பெப்ரவரி 23 , பி.ப. 01:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
நியூசிலாந்து, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில், அவுஸ்திரேலிய அணியின் தலைவர் ஸ்டீவன் ஸ்மித், அவ்வணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜொஷ் ஹேஸல்வூட் இருவரும், நடுவரோடு வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்ட விவகாரத்தில் சர்ச்சைக்குக்கு உள்ளாகினர்.
நியூசிலாந்து அணியின் இரண்டாவது இனிங்ஸில், 73ஆவது ஓவரின் முதற்பந்திலேயே, இச்சம்பவம் இடம்பெற்றது.
கேன் வில்லியம்ஸனுக்குப் பந்தை வீசிய ஹேஸல்வூட், எல்.பி.டபிள்யூ ஆட்டமிழப்பொன்றைக் கோரினார். கள நடுவர் றன்மோர் மார்ட்டினேஸ், அதை மறுத்தார். அதையடுத்து, தீர்ப்பு மறுபரீசிலனைத் திட்டத்தின் மூலம், அத்தீர்ப்புக்கு எதிராக அவுஸ்திரேலியா முறையிட்டது. அந்த ஆட்டமிழப்புக் கோரிக்கை குறித்த மறு ஒளிபரப்புகளை ஆராய்ந்த மூன்றாவது நடுவர் றிச்சர்ட் இலிங்வேர்த், வில்லியம்ஸனின் துடுப்பில் பந்து பட்டமைக்கான ஆதாரங்கள் காணப்படவில்லையென ஆரம்பத்தில் தெரிவித்தாலும், அதன் பின்னர், ஹொட் ஸ்பொட் மூலமாக, அவரது துடுப்பில் அடையாளம் காணப்பட, ஒரேயொரு மறு ஒளிபரப்பைப் பார்வையிட்ட அவர், துடுப்பைப் பந்து தாக்கியுள்ளதாகத் தெரிவித்து, ஆட்டமிழப்பு இல்லையெனத் தெரிவித்தார்.
எனினும், துடுப்பில் காணப்பட்ட அந்த அடையாளம், கேன் வில்லியம்ஸனின் காலைத் துடுப்புத் தாக்கியதாலும் ஏற்பட்டிருக்கலாமென, அவுஸ்திரேலிய வீரர்கள் தெரிவித்ததோடு, வேறு முனைகளிலிருந்து அந்த மறு ஒளிபரப்பை ஆராயாமல், தீர்ப்பு வழங்கியதை எதிர்த்தனர். ஒரு கட்டத்தில், அது குறித்துக் கள நடுவருடன் ஸ்டீவன் ஸ்மித் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட, அங்கு வந்த பந்துவீச்சாளரான ஹேஸல்வூட், 'மூன்றாவது நடுவர் யார்?" என்ற அர்த்தத்தில், கெட்ட வார்த்தையொன்றை உதிர்த்தார். இது, நேரடி ஒளிபரப்பிலும் சிக்கியிருந்தது. இதனைத் தொடர்ந்தே, சர்ச்சையில் அவர்கள் சிக்கியுள்ளனர்.
இதில் ஹேஸல்வூட், சர்வதேச கிரிக்கெட் சபையின் ஒழுக்க விதிகளை மீறியதை ஏற்றுக் கொண்டுள்ளார். எனவே, அவருக்கு என்ன தண்டனை விதிக்கப்படுமென்பது, இன்று போட்டி முடிவடைந்ததும் அறிவிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .