2026 ஏப்ரல் 03, வெள்ளிக்கிழமை

சிற்றியை வென்றது லெய்செஸ்டர்

Shanmugan Murugavel   / 2016 பெப்ரவரி 07 , மு.ப. 01:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையே இடம்பெற்றுவரும் இங்கிலாந்து பிறீமியர் லீக் தொடரின் கடந்த சனிக்கிழமை (06) இடம்பெற்ற போட்டிகளில் லெய்செஸ்டர், அஸ்டன் வில்லா, நியூகாசில், எவெர்ற்றன், டொட்டென்ஹாம், சௌதாம்டன் ஆகிய அணிகள் வெற்றி பெற்றதுடன், லிவர்பூல், சந்தர்லேண்ட் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியும் சுவான்சீ, கிறிஸ்டல் பலஸ் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியும் சமநிலையில் முடிவடைந்தது.

லெய்செஸ்டர் சிற்றி, மன்செஸ்டர் சிற்றி அணிகளுக்கிடையிலான போட்டியில், 3-1 என்ற கோல்கணக்கில் லெய்செஸ்டர் வெற்றி பெற்றிருந்தது. இப்போட்டியில், லெய்செஸ்டர் சிற்றி சார்பாக ரொபேர்ட் ஹூத் போட்டியின் 3ஆவது, 60ஆவது நிமிடங்களில் கோல்களைப் பெற்றதுடன் போட்டியின் 48ஆவது நிமிடத்தில் ரியாத் மஹ்ரேஸ் ஒரு கோலைப் பெற்றிருந்தார். மன்செஸ்டர் சிற்றி சார்பாக பெறப்பட்ட கோலை, போட்டியின் 87ஆவது நிமிடத்தில் சேஜியோ அக்ரோ பெற்றிருந்தார்.

இப்போட்டியில் பெறப்பட்ட வெற்றியுடன், இங்கிலாந்து பிறீமியர் லீக் அணிகளுக்கான தரவரிசைப்பட்டியலில் 58 புள்ளிகளுடன் முதலிடத்தை வகிக்கும் லெய்செஸ்டர் சிற்றி, தமக்கும் மூன்றாமிடத்திலிருக்கும் மன்செஸ்டர் சிற்றிக்குமான புள்ளிகள் வித்தியாசத்தை ஐந்தாக அதிகரித்துக் கொண்டது.

இந்நிலையில், லிவர்பூல், சந்தர்லேண்ட் அணிகளுக்கிடையிலான போட்டியில், இரண்டு அணிகளும் தலா இரண்டு கோல்களைப் பெற்ற நிலையில் போட்டி சமநிலையில் முடிவடைந்தது. லிவர்பூல் சார்பாக பெறப்பட்ட கோல்களை, போட்டியின் 59ஆவது நிமிடத்தில், ரொபேர்டோ பேர்மிங்கோவும் போட்டியின் 70ஆவது நிமிடத்தில் அடம் லலானாவும் பெற்றிருந்தனர். சந்தர்லேண்ட் சார்பாக பெறப்பட்ட கோல்களை, போட்டியின் 82ஆவது நிமிடத்தில் அடம் ஜோன்சனும் போட்டியின் 89ஆவது நிமிடத்தில் ஜெர்மைன் டிபோவும் பெற்றிருந்தனர்.

இது தவிர, அஸ்டன் வில்லா, நோர்விச் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், 2-0 என்ற கோல்கணக்கில் அஸ்டன் வில்லா வெற்றி பெற்றதுடன் நியூகாசில், வெஸ்ட் புரோம் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், 1-0 என்ற கோல்கணக்கில் நியூகாசில் வெற்றி பெற்றதோடு எவெர்ற்றன், ஸ்டோக் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், 3-0 என்ற கோல்கணக்கில் எவெர்ற்றன் வெற்றி பெற்றதுடன் டொட்டென்ஹாம், வட்போர்ட் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், 1-0 என்ற கோல்கணக்கில் டொட்டென்ஹாம் வெற்றி பெற்றதோடு, சௌதாம்டன், வெஸ்ட் ஹாம் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், சௌதாம்டன் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றதோடு, சுவான்சீ, கிறிஸ்டல் பலஸ் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், இரண்டு அணிகளும் தலா ஒவ்வொரு கோல்களைப் பெற்றிருந்த நிலையில், போட்டி சமநிலையில் முடிவடைந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .