Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
J.A. George / 2022 ஒக்டோபர் 20 , பி.ப. 04:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி20 உலகக்கோப்பை தொடரின் 8ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் தற்போது சூப்பர் 12 சுற்றில் நுழைவதற்காக தரவரிசையில் கடைசி எட்டு இடங்களில் இருக்கும் அணிகள் கடுமையாக போட்டியிட்டு வருகின்றன.
இந்த நிலையில் இன்று இடம்பெற்ற இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள் இடையிலான T20 உலகக் கிண்ண முதல் சுற்றின் தீர்மானம் கொண்ட போட்டியில் இலங்கை நெதர்லாந்து அணியினை 16 ஓட்டங்களால் வீழ்த்தியிருக்கின்றது.
மேலும் இந்த வெற்றியுடன் தொடரின் முதல் சுற்றில் இரண்டு வெற்றிகளைப் பதிவு செய்த இலங்கை அணி, T20 உலகக் கிண்ணத் தொடரின் சூப்பர் 12 சுற்றில் விளையாடும் வாய்ப்பினையும் பெற்றிருக்கின்றது.
ஆனால் இலங்கை அணியுடன் தோல்வியடைந்த நெதர்லாந்து அணி முதல் சுற்றில் இரண்டு வெற்றிகளைப் பெற்ற போதும் குறைவான நிகர ஓட்ட வித்தியாசம் காரணமாக அடுத்த சுற்றுக்கு தெரிவாக நமீபிய – ஐக்கிய அரபு இராச்சிய அணிகள் இடையிலான போட்டி முடிவினை எதிர்பார்த்திருக்கின்றது.
முதல் சுற்றின் குழு A அணிகளின் இந்தப் போட்டி முன்னதாக அவுஸ்திரேலியாவின் கீலோங் நகரில் ஆரம்பித்தது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் தசுன் ஷானக்க முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்திருந்தார்.
முதலில் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த இலங்கை அணிக்கு குசல் மெண்டிஸ் மற்றும் பெதும் நிஸ்ஸங்க ஆகியோர் ஆரம்ப வீரர்களாக களம் வந்திருந்தனர்.
இவ்வீரர்கள் போட்டியின் முதல் பவர் பிளே இல் மெதுவான ஆரம்பத்தை பெற்ற பின்னர் இலங்கை அணியின் முதல் விக்கெட்டாக பெதும் நிஸ்ஸங்க வான் மீக்ரானின் பந்துவீச்சில் 13 ஓட்டங்களுடன் போல்ட் செய்யப்பட்டார்.
இதன் பின்னர் புதிய துடுப்பாட்டவீரராக வந்த தனன்ஞய டி சில்வாவும் ஓட்டமின்றி அடுத்த பந்தில் ஆட்டமிழக்க இலங்கை அணி ஒரு கட்டத்தில் 36 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.
எனினும் இலங்கை அணியின் மூன்றாம் விக்கெட்டுக்காக சரித் அசலன்க மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோர் இணைந்து சிறந்த இணைப்பாட்டம் ஒன்றை உருவாக்கியதோடு மூன்றாம் விக்கெட் இணைப்பாட்டம் 60 ஓட்டங்கள் வரை நீடித்தது.
இந்நிலையில் இலங்கை அணியின் நான்காம் விக்கெட்டாக மாறிய சரித் அசலன்க 30 பந்துகளில் 3 பெளண்டரிகள் அடங்கலாக 31 ஓட்டங்கள் எடுத்தார்.
சரித் அசலன்கவின் பின்னர் இலங்கை அணி சீரான இடைவெளிகளில் விக்கெட்டுக்களை பறிகொடுத்த போதும் குசல் மெண்டிஸ் வெளிப்படுத்திய அதிரடி ஆட்டத்தின் காரணமாக இலங்கை அணி 20 ஓவர்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்து 162 ஓட்டங்கள் எடுத்தது.
இலங்கை துடுப்பாட்டம் சார்பில் குசல் மெண்டிஸ் தன்னுடைய வெறும் 44 பந்துகளுக்கு 5 சிக்ஸர்கள் மற்றும் 5 பெளண்டரிகள் அடங்கலாக 79 ஓட்டங்கள் எடுத்தார். மறுமுனையில் நெதர்லாந்து பந்துவீச்சு சார்பில் போல் வான் மீக்ரென் மற்றும் பாஸ் டி லீடே ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றியிருந்தனர்.
பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 163 ஓட்டங்களை அடைய நெதர்லாந்து அணி போராட்டமான ஆட்டத்தினை வெளிப்படுத்தியிருந்தது.
அணியின் ஆரம்ப வீரர்களில் ஒருவராக வந்த மெக்ஸ் ஓடோவ்ட் வெற்றி இலக்கிற்காக கடுமையாக போராடிய போதும் இலங்கை பந்துவீச்சாளர்களினை சமாளிக்க முடியாமல் போக நெதர்லாந்து அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 146 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தது.
நெதர்லாந்து துடுப்பாட்டம் சார்பில் இறுதிவரை போராட்டம் காட்டிய மெக்ஸ் ஓடோவ்ட் 53 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 6 பௌண்டரிகள் அடங்கலாக 71 ஓட்டங்கள் எடுத்தார்.
இலங்கை பந்துவீச்சு சார்பில் வனிந்து ஹஸரங்க 3 விக்கெட்டுக்களை கைப்பற்றியும், மகீஷ் தீக்ஷன 2 விக்கெட்டுக்களை கைப்பற்றியும் இலங்கையின் வெற்றியை உறுதி செய்தனர். போட்டியின் ஆட்டநாயகனாக குசல் மெண்டிஸ் தெரிவாகினார்.
வெற்றி பெற்ற இலங்கை அணி சூப்பர் 12 சுற்றுக்கு தெரிவாகியுள்ளது. எனினும், அது விளையாடவிருக்கும் குழு குறித்து அறிய நமீபிய – ஐக்கிய அரபு இராச்சிய அணிகள் இடையிலான போட்டியின் முடிவினை பாரக்கும் நிலைமை காணப்படுகின்றது.
இலங்கை அணி
தசுன் ஷானக்க (தலைவர்), பெதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், தனன்ஞய டி சில்வா, பானுக்க ராஜபக்ஷ, வனிந்து ஹஸரங்க, சரித் அசலன்க, சாமிக்க கருணாரட்ன, மகீஷ் தீக்ஷன, லஹிரு குமார, பினுர பெர்னாண்டோ
நெதர்லாந்து அணி
மெக்ஸ் ஓடோவ்ட், விக்ரமஜித் சிங், பாஸ் டி லேடெ, டொம் கூப்பர், கொலின் ஏக்கர்மென், ஸ்கொட் எட்வார்ட்ஸ், டிம் பிரின்கல், ரொலோப் வன் டர் மெர்வே, டிம் வன் டர் குக்டேன், பிரட் கிளாஸன், போல் வான் மீக்ரென்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
18 May 2025