2026 ஏப்ரல் 01, புதன்கிழமை

பனாமா ஆவணங்கள்: யு.இ.எஃப்.ஏ அலுவலங்களில் தேடுதல்

Shanmugan Murugavel   / 2016 ஏப்ரல் 07 , மு.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய கால்பந்தாட்ட நிர்வாக அலகான ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றிய அலுவலங்களில் சுவிற்ஸர்லாந்து பொலிஸாரால் தேடுதல் நடாத்தப்பட்டுள்ளது.

சுவிற்ஸர்லாந்து சட்டமா அதிபர் அலுவலகத்தால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையொன்றில், நையோன் கட்டடத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைக்கப்பட்ட தேடுதலானது, ஆதாரங்களை கைப்பற்றும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

உலக கால்பந்தாட்ட அலகான சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் (பீபா) தற்போதைய தலைவரும் ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் முன்னாள் செயலாளரான ஜியானி இன்பான்டினோவின் பெயரும் பனாமா சட்ட ஆலோசனை நிறுவனமான மொஸாக் பொன்செகாவின் கசிந்துள்ள ஆவணங்களில் அவரின் பெயரும் இடம்பெற்றதைத் தொடர்ந்தே மேற்படி தேடுதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எவ்வாறெனினும் தான் எந்தத் தவறும் செய்யவில்லை என மறுத்துள்ளார்.

கையூட்டு பெற்றதாக புலனாய்வு கூட்டாட்சிப் பணியகத்தினால் குற்றஞ்சாட்டப்படும் வர்த்தகர்கள் இருவருடன் ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்திலிருக்போது 2006ஆம் ஆண்டு தொலைக்காட்சி உரிமத்துக்கு இன்பான்டினோ கைச்சாதிட்டுள்ளார்.

ஹூகோ ஜிங்கிஸ், அவரது மகன் மரியானோவால் ஆளப்படும் க்றொஸ் ட்ரேடிங் எனும் நிறுவனமானது, ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் 2006ஆம் ஆண்டு சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டத் தொடருக்கான தொலைக்காட்சி உரிமையை 111,000 அமெரிக்க டொலர்களுக்கு வாங்கி, உடனடியாகவே ஈக்குவடோர் ஒளிபரப்பாளரான டெலிமஸோநாஸுக்கு 311,170 அமெரிக்க டொலர்களுக்கு விற்றிருந்தது.

தவிர, ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சுப்பர் கிண்ணத்துக்கான உரிமைகளுக்காக 28,000 அமெரிக்க டொலர்களைச் செலுத்திய க்றொஸ் ட்ரேடிங், 126,000 அமெரிக்க டொலர்களுக்கு டெலிமஸோநாஸுக்கு விற்றிருந்தது.

மேற்கூறிய ஒப்பந்தங்களே மொஸாக் பொன்செகா நிறுவனத்தின் கசிந்த 11 மில்லியன் கசிந்த ஆவணங்களில் இடம்பெற்றிருந்தது.

இதேவேளை, மேற்படி ஆவணங்களில் பெயரிடப்பட்டிருந்த பீபா அதிகாரியான ஜுவான் பெட்ரோ டமியனி தனது பதவியிலிருந்து இராஜினாமாச் செய்துள்ளார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .