Shanmugan Murugavel / 2016 ஏப்ரல் 25 , மு.ப. 01:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகின் 5ஆம் நிலை வீரரும் களிமண்தரை ராஜா என அழைக்கப்படுவருமான ஸ்பெய்னின் ரபேல் நடால், களிமண்தரையில் தனது ஆதிக்கத்தை மீள ஞாபகப்படுத்தியதோடு, களிமண்தரையில் அதிக சம்பியன் பட்டங்களை வென்றமைக்கான உலக சாதனையையும் சமப்படுத்தியுள்ளார். பார்சிலோனா பகிரங்க டென்னிஸ் தொடரில் சம்பியன் பட்டத்தை வென்றமையின் மூலமே, இந்தச் சாதனையை அவர் சமன்செய்தார்.
உலகின் 6ஆம் நிலை வீரரும் பார்சிலோனா பகிரங்க டென்னிஸ் தொடரின் 2015ஆம் ஆண்டுக்கான சம்பியனுமான கீ நிஷிகோரியை எதிர்கொண்ட ரபேல் நடால், 6-4, 7-5 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிபெற்று, சம்பியன் பட்டத்தை வெற்றிகொண்டார்.
இரண்டு மணித்தியாலங்களுக்கு மேல் நீடித்த இந்தப் போட்டியில், முதலாவது செட்டை 6-4 என்ற புள்ளிகள் கணக்கில் கைப்பற்றிய நடால், இரண்டாவது செட்டில் 4-1 என்ற நிலையில் முன்னிலை வகித்தபோது, இலகுவான வெற்றியைப் பெறுவாரென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நிஷிகோரியின் சிறப்பான போராட்டம் காரணமாக, 7-5 என்ற புள்ளிகளாலேயே அவரால் வெற்றிபெற முடிந்தது.
இதற்கு முன்னர் நடைபெற்ற களிமண்தரைப் போட்டிகள் 10இல் தொடர்ச்சியாக வெற்றிகளைப் பெற்றிருந்த ரபேல் நடால், மொன்டே கார்லோ பட்டத்தையும் வென்றிருந்தார். அத்தோடு, இதற்கு முன்னர் 8 தடவைகள் இப்பட்டத்தைக் கைப்பற்றியிருந்த நிலையில், 2 தடவைகள் தொடர்ச்சியாகச் சம்பியனாகியிருந்த நிஷிகோரியைத் தோற்கடித்து, தனது 9ஆவது பட்டத்தை வென்றார்.
இதன்மூலம், களிமண்தரையில் 49 தடவைகள், சம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ள ரபேல் நடால், களிமண் ஆடுகளத்தில் அதிக பட்டங்களைக் கைப்பற்றிய ஆர்ஜென்டினாவைச் சேர்ந்த ஜாம்பவானான கில்லெர்மோ விலாஸின் 49 பட்டங்கள் என்ற சாதனையைச் சமப்படுத்தியுள்ளார்.
வெற்றியின் பின்னர் கருத்துத் தெரிவித்த ரபேல் நடால், 'இதுபோன்றதொரு தருணத்துக்துக்காகத் தான் கடுமையாக உழைத்துவந்தேன். எனது சொந்த நாட்டில் விளையாடிவந்தேன் என்பது, அதை மிகவும் விசேடமாக்குகிறது. நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்" எனத் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .