2026 பெப்ரவரி 07, சனிக்கிழமை

மேற்கிந்தியத் தீவுகளை வென்ற இலங்கை

Shanmugan Murugavel   / 2024 ஒக்டோபர் 21 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான முதலாவது போட்டியில் இலங்கை வென்றது.

மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில், பல்லேகலவில் ஞாயிற்றுக்கிழமை (20) நடைபெற்ற இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற மேற்கிந்தியத் தீவுகளின் அணித்தலைவர் ஷே ஹோப் தமதணி முதலில் துடுப்பெடுத்தாடுமென அறிவித்தார். இலங்கை சார்பாக நிஷான் மதுஷ்க ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் அறிமுகத்தை மேற்கொண்டிருந்தார்.

அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள், ஆரம்பத் துடுப்பாட்டவீரர்கள் பிரண்டன் கிங், அலிக் அதனஸேயை வனிது ஹசரங்கவிடம் இழந்ததுடன், சிறிது நேரத்தில் ஹோப்பையும் ஜெஃப்ரி வன்டர்சேயிடம் இழந்தது.

பின்னர் கேசி கார்ட்டி 37 (58) ஓட்டங்களுடன் அணித்தலைவர் சரித் அசலங்கவிடம் வீழ்ந்த நிலையில், ஷெர்ஃபேர் ருதஃபோர்ட்டும், றொஸ்டன் சேஸும் இனிங்ஸைக் கட்டியெழுப்பிய நிலையில் 38.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 185 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது மழை குறுக்கிட்டதோடு மேற்கிந்தியத் தீவுகளின் இனிங்ஸ் முடிவுக்கு வந்தது. ருதஃபோர்ட் ஆட்டமிழக்காமல் 74 (82), றொஸ்டன் சேஸ் ஆட்டமிழக்காமல் 33 (33) ஓட்டங்களைப் பெற்றிருந்தனர்.

பதிலுக்கு டக்வேர் லூயிஸ் ஸ்டேர்ன் முறையில் 37 ஓவர்களில் 232 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய இலங்கை, ஆரம்பத்திலேயே அல்ஸாரி ஜோசப்பிடம் அவிஷ்க பெர்ணாண்டோ, குசல் மென்டிஸை இழந்ததுடன், சிறிது நேரத்தில் குடகேஷ் மோட்டியிடம் சதீர சமரவிக்கிரமவையும் இழந்தது.

பின்னர் ஜோடி சேர்ந்த மதுஷ்க, அசலங்கவின் இணைப்பாட்டத்தில் வெற்றியை நோக்கி பயணித்த இலங்கை, மதுஷ்க 69 (54), அசலங்க 77 (71) ஓட்டங்களுடன் மோட்டியின் அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழந்தபோதும் கமிந்து மென்டிஸின் ஆட்டமிழக்காத 30 (21), ஜனித் லியனகேயின் ஆட்டமிழக்காத 18 (18) ஓட்டங்களோடு 31.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கை இலங்கை அடைந்தது.

இப்போட்டியின் நாயகனாக அசலங்க தெரிவானார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X