2025 மே 19, திங்கட்கிழமை

மேற்கிந்தியத் தீவுகளை வெள்ளையடித்த இந்தியா

Shanmugan Murugavel   / 2022 பெப்ரவரி 21 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத் தீவுகளை இந்தியா வெள்ளையடித்துள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட இந்த இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில், கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற மூன்றாவது போட்டியிலும் வென்றமையைத் தொடர்ந்தே 3-0 என இந்தியா வெள்ளையடித்துள்ளது.

இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற மேற்கிந்தியத் தீவுகளின் அணியின் தலைவர் கெரான் பொலார்ட், இந்தியாவை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தார். இந்தியா சார்பாக வேகப்பந்துவீச்சாளர் ஆவேஷ் கான் அறிமுகத்தை மேற்கொண்டிருந்தார்.

அந்தவகையில், முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா, ருத்துராஜ் கைகவாட்டை ஆரம்பத்திலேயே ஜேஸன் ஹோல்டரிடம் இழந்தது. அடுத்து வந்த ஷ்ரேயாஸ் ஐயர் விரைவாக ஓட்டங்களைப் பெற்ற நிலையில் 25 (16) ஓட்டங்களுடன் ஹெய்டன் வோல்ஷ் ஜூனியரிடம் வீழ்ந்த நிலையில், இஷன் கிஷனும் உடனேயே 34 (31) ஓட்டங்களுடன் றொஸ்டன் சேஸிடம் வீழ்ந்திருந்தார். அணித்தலைவர் றோஹித் ஷர்மாவும் குறிப்பிட்ட நேரத்தில் டொமினிக் ட்ரேக்ஸிடம் வீழ்ந்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து சூரியகுமார் யாதவ்வின் 65 (31), வெங்கடேஷ் ஐயரின் ஆட்டமிழக்காத 35 (19) ஓட்டங்களோடு 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 184 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில், சேஸ் 4-0-23-1, ஹோல்டர் 4-0-29-1, ஹெய்டன் வோல்ஷ் ஜூனியர் 4-0-30-1, பேபியன் அலென் 1-0-5-0 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.

பதிலுக்கு, 185 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் ஆரம்பத்திலேயே கைல் மேயர்ஸ், ஷே ஹோப்பை தீபக் சஹரிடம் இழந்தது. பின்னர் றொவ்மன் பவலும், நிக்கலஸ் பூரானும் வேகமாக ஓட்டங்களைப் பெற்ற நிலையில், ஹர்ஷால் பட்டேலிடம் 25 (14) ஓட்டங்களோடு பவல் வீழ்ந்தார்.

அடுத்து வந்த பொலார்ட், ஹோல்டர் ஆகியோர் வெங்கடேஷ் ஐயரிடம் வீழ்ந்ததோடு, அடுத்து வந்த சேஸ் ஹர்ஷால் பட்டேலிடம் வீழ்ந்திருந்தார். தொடர்ந்து வேகமாக ஓட்டங்களைப் பெற்ற நிக்கலஸ் பூரான் 61 (47) ஓட்டங்களோடு ஷர்துல் தாக்கூரிடம் வீழ்ந்ததோடு, 29 (21) ஓட்டங்களோடு பட்டேலிடம் றொமாறியோ ஷெப்பர்ட் வீழ்ந்தார். அடுத்து வந்த ட்ரேக்ஸ், தாக்கூரிடம் வீழ்ந்த நிலையில் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 167 ஓட்டங்களையே பெற்று 17 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. பந்துவீச்சில், பட்டேல் 4-0-22-3, தீபக் சஹர் 1.5-0-15-2, ஷர்துல் தாக்கூர் 4-0-33-2 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.

இப்போட்டியின் நாயகனாகவும், தொடரின் நாயகனாகவும் சூரியகுமார் யாதவ் தெரிவாகினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X