2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

றியல் மட்ரிட்டை வீழ்த்தி இறுதிப் போட்டியில் பார்சிலோனா

Editorial   / 2019 மார்ச் 01 , மு.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழங்களுக்கிடையிலான கோப்பா டெல் ரே தொடரின் இறுதிப் போட்டிக்கு, நடப்புச் சம்பியன்களான பார்சிலோனா தகுதிபெற்றுள்ளது.

விலகல் முறையிலான இத்தொடரில், தமது மைதானத்தில் இடம்பெற்ற முதலாவது சுற்று அரையிறுதிப் போட்டியை 1-1 என சமநிலையில் முடித்திருந்த பார்சிலோனா, றியல் மட்ரிட்டின் மைதானத்தில், இலங்கை நேரப்படி நேற்று  அதிகாலை இடம்பெற்ற இரண்டாவது சுற்று அரையிறுதிப் போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் வென்று, 4-1 என மொத்த கோல் கணக்கிலேயே இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றது.

இப்போட்டியின் முதற்பாதியில், றியல் மட்ரிட்டின் இளம் முன்கள வீரர் வின்சியஸ் ஜுனியர், கோல் கம்பத்தை நோக்கி ஐந்து உதைகளைக் கொண்டிருந்தபோதும் அவற்றை பார்சிலோனாவின் கோல் காப்பாளர் மார்க் அன்ட்ரே டியர் ஸ்டீகன் தடுத்ததோடு, அவரின் இரண்டு உதைகள் கோல் கம்பத்துக்கு மேலால் சென்றதுடன், அவரின் பெனால்டி வாய்ப்பொன்று நிராகரிக்கப்பட்டது.

இதன்பின்னர், இரண்டாவது பாதியின் ஆரம்பத்தில் சக முன்கள வீரர் உஸ்மான் டெம்பிலியால் முன்னெடுக்கப்பட்ட வேகமான நகர்வொன்றின் மூலம் போட்டியின் 50ஆவது நிமிடத்தில் கோலைப் பெற்ற பார்சிலோனாவின் இன்னொரு முன்கள வீரரான லூயிஸ் சுவாரஸ், தனதணிக்கு முன்னிலையை வழங்கினார்.

பின்னர், 59ஆவது நிமிடத்தில், டெம்பிலி வழங்கிய பந்தொன்றை சுவாரஸ் பெறுவதை தடுக்க முயன்ற றியல் மட்ரிட்டின் பின்கள வீரர் ரபேல் வரான், தனது கோல் கம்பத்துக்குள் பந்தைச் செலுத்த, தமது முன்னிலையை பார்சிலோனா இரட்டிப்பாக்கியதுடன், அடுத்த நான்காவது நிமிடத்தில் வென்றெடுத்த பெனால்டியொன்றை சுவாரஸ் கோலாக்கியதோடு, இறுதியில் 3-0 என்ற கோல் கணக்கில் வென்று, 4-1 என்ற மொத்த கோல் கணக்கில் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .