2026 ஏப்ரல் 01, புதன்கிழமை

லா லிகா தொடர்: பார்சிலோனா, றியல் மட்ரிட் வெற்றி

Shanmugan Murugavel   / 2016 ஏப்ரல் 24 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையே இடம்பெற்றுவரும் லா லிகா தொடரின் கடந்த சனிக்கிழமை (23) இடம்பெற்ற போட்டிகளில் பார்சிலோனா, றியல் மட்ரிட், அத்லெட்டிகோ மட்ரிட் ஆகிய அணிகள் வெற்றி பெற்றுள்ளன.

பார்சிலோனா, ஸ்போட்டிங் டீ ஜியோன் ஆகிய அணிகளுக்கிடையில் இடம்பெற்ற போட்டிகளில், 6-0 என்ற கோல்கணக்கில் பார்சிலோனா அணி வெற்றி பெற்றது. அவ்வணி சார்பாக லூயிஸ் சுவாரஸ் மறுபடியும் நான்கு கோல்களை பெற்றதோடு லியனல் மெஸ்ஸி, நேமர் ஆகியோரும் தலா ஒவ்வொரு கோல்களைப் பெற்றனர்.

இந்தப் போட்டியில் பெற்ற வெற்றியுடன் 82 புள்ளிகளைப் பெற்றுள்ள பார்சிலோனா அணி, லா லிகா புள்ளிகள் தரவரிசையில் முதலிடத்துக்கு திரும்பியுள்ளது. இதேவேளை, இப்போட்டியில் பெற்ற நான்கு கோல்களுடன் இப்பருவகால லா லிகா தொடரில் 34 கோல்களை பெற்றுள்ள லூயிஸ் சுவாரஸ், 31 கோல்களை பெற்றுள்ள றியல் மட்ரிட்டின் கிறிஸ்டியானோ ரொனால்டோவை முந்தியுள்ளார்.

இதேவேளை, றியல் மட்ரிட், றயோ வலெக்கனோ ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில் 3-2 என்ற கோல்கணக்கில் றியல் மட்ரிட் வெற்றி பெற்றது. இப்போட்டியில், றியல் மட்ரிட் சார்பாக கரித் பேல் இரண்டு கோல்களையும் லூகாஸ் வஸ்கூஸ் ஒரு கோலினையும் பெற்றிருந்தார். இப்போட்டியில் காயம் காரணமாக கிறிஸ்டியானோ ரொனால்டோ ஏற்கெனவே பங்கேற்றிருக்காத நிலையில், முதற்பாதியின் முடிவுக்கு மூன்று நிமிடங்கள் முன்பதாக காயம் காரணமாக கரிம் பென்ஸீமாவும் போட்டியிலிருந்து இடைநடுவே விலகியிருந்தார்.

லா லிகா தொடரின் இப்பருவகாலத்தில் மூன்று போட்டிகள் மீதமிருக்கையில் லா லிகா புள்ளிகள் தரவரிசையில் 81 புள்ளிகளைப் பெற்று மூன்றாமிடத்திலுள்ள றியல் மட்ரிட், முதலாமிடத்திலுள்ள பார்சிலோனா, இரண்டாமிடத்திலுள்ள அத்லெட்டிகோ மட்ரிட்டை விட ஒரு புள்ளியே குறைவாகப் பெற்றுள்ளது.

இந்நிலையில், அத்லெட்டிகோ மட்ரிட், மலாகா ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில் 1-0 என்ற கோல்கணக்கில் அத்லெட்டிகோ மட்ரிட் வெற்றி பெற்றது. இந்த வெற்றியுடன் லா லிகா புள்ளிகள் தரவரிசையில் 82 புள்ளிகளைப் பெற்றுள்ள அத்லெட்டிகோ மட்ரிட், கோல் எண்ணிக்கை அடிப்படையில் லா லிகா புள்ளிகள் தரவரிசையில் இரண்டாமிடத்தில் உள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .