Shanmugan Murugavel / 2016 பெப்ரவரி 23 , மு.ப. 07:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
டெஸ்ட் தரப்படுத்தலில் முதலிடத்தையும், நியூசிலாந்துக்கெதிரான டெஸ்ட் தொடர் வெற்றியையும் நோக்கி, அவுஸ்திரேலிய அணி சென்று கொண்டிருக்கிறது. 2ஆவது டெஸ்ட் போட்டியின் 4ஆம் நாளில் சிறப்பான போராட்டத்தை வெளிப்படுத்தியதன் காரணமாகவே, அவுஸ்திரேலிய அணி முன்னிலையில் காணப்படுகிறது.
4 விக்கெட்டுகளை இழந்து 121 ஓட்டங்களுடன் இன்றைய நாளைத் தொடர்ந்த நியூசிலாந்து அணி, 4ஆவது விக்கெட்டுக்காக 102 ஓட்டங்களைப் பகிர்ந்த பொதிலும், அதன் பின்னர் விக்கெட்டுகளைத் தொடர்ச்சியாக இழந்து, 7 விக்கெட்டுகளை இழந்து 210 ஓட்டங்களுடன் தடுமாறியது. எனினும், 8ஆவது விக்கெட்டுக்காக 118 ஓட்டங்கள் பகிரப்பட்டன. இறுதியில், 335 ஓட்டங்களுக்குச் சகல விக்கெட்டுகளையும் அவ்வணி இழந்தது. துடுப்பாட்டத்தில் கேன் வில்லிம்ஸன் 97, மற் ஹென்றி 66, பி.ஜே வற்லிங் 46, கொரே அன்டர்சன் 40, டொம் லேதம் 39 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் ஜக்ஸன் பேர்ட் 5 விக்கெட்டுகளையும் ஜேம்ஸ் பற்றின்சன் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
201 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி, இன்றைய நாள் முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 70 ஓட்டங்களுடன் காணப்படுகிறது. ஜோ பேண்ஸ் 28, உஸ்மான் கவாஜா 19 ஓட்டங்களுடன் களத்தில் காணப்படுகின்றனர். டேவிட் வோணர் 22 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
இப்போட்டியை வெல்வதற்கு இன்னமும் 131 ஓட்டங்கள் தேவைப்படுகின்ற நிலையில், இப்போட்டியில் வெற்றிபெற்றால், டெஸ்ட் தரப்படுத்தலில் முதலிடத்தை, அவுஸ்திரேலிய அணி பெற்றுக் கொள்ளுமென்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .