2025 ஜூலை 05, சனிக்கிழமை

ஷெஃபீல்ட் யுனைட்டெட்டிடம் தோற்றது ஆர்சனல்

Editorial   / 2019 ஒக்டோபர் 22 , பி.ப. 07:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், ஷெஃபீல்ட் யுனைட்டெட்டின் மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் ஆர்சனல் தோற்றது.

இப்போட்டியின் ஆரம்பத்தில் ஆர்சனலின் பின்களவீரர் சோக்ரடீஸ் பஸ்தபோலஸின் அங்கியை ஷெஃபீல்ட் யுனைட்டின் பின்களவீரர் ஜோன் எகன் இழுத்தபோதும் பெனால்டிக்கான கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டிருந்தன.

பின்னர், ஆர்சனலின் பின்களவீரரான சியட் கொலைஸக், சக முன்களவீரர் நிக்கொலஸ் பெப்பேயிடம் அற்புதமான பந்துப்பரிமாற்றமொன்றை மேற்கொண்டிருந்தபோதும் அவர் கோல் பெறும் வாய்ப்பைத் தவறவிட்டிருந்தார்.

இந்நிலையில், போட்டியின் 30ஆவது நிமிடத்தில், ஷெஃபீல்ட் யுனைட்டெட்டின் மத்தியகளவீரரான ஒலிவர் நோர்வூட்டின் மூலையுதை, அவரின் சக பின்களவீரரான ஜக் ஓ கோணலை அடைந்திருந்த நிலையில், அவர் தலையால் முட்டி சக முன்களவீரர் லைஸ் மூஸெட்டிடம் கொடுக்க அவர் அதைக் கோலாக்க ஷெஃபீல்ட் யுனைட்டெட் முன்னிலை பெற்றது.

இந்நிலையில், முதற்பாதி முடிவுக்கு முன்னால் ஆர்சனலின் அணித்தலைவரும் மத்தியகளவீரருமான கிரனிட் ஸாகா கோல் கம்பத்தை நோக்கி நீண்ட தூரத்திலிருந்து உதைந்திருந்தபோதும் அதை ஷெஃபீல்ட் யுனைட்டெட்டின் கோல் காப்பாளர் டீன் ஹென்டர்சன் அபாரமாகத் தடுத்திருந்தார்.

இதேவேளை, இரண்டாவது பாதியில் மாற்றுவீரராகக் களமிறங்கிய ஆர்சனலின் மத்தியகளவீரர் டனி செபலோஸ், சக முன்களவீரர் புகாயோ ஸாகாவிடமிருந்து வந்த பந்தை மெதுவாகவே டீன் ஹென்டர்சனை நோக்கி உதைய அவர் அதைத் தடுக்க இறுதியில் 0-1 என்ற கோல் கணக்கில் ஆர்சனல் தோல்வியடைந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .