2026 ஏப்ரல் 03, வெள்ளிக்கிழமை

'டி வில்லியர்ஸே சிறந்தவர்'

Shanmugan Murugavel   / 2016 மே 25 , மு.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்போதுள்ள துடுப்பாட்ட வீரர்களில், டெஸ்ட், ஒருநாள் சர்வதேசப் போட்டிகள், இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகள் என, மூன்று வகையான போட்டிகளில் சிறந்த துடுப்பாட்ட வீரர் யார் என்பது, விவாதத்துக்குரிய ஒன்று. அந்த விவாதத்தில், இருவருக்கிடையிலேயே பிரதான போட்டி காணப்படுகிறது. ஒருவர், இந்தியாவின் விராத் கோலி. மற்றையவர், தென்னாபிரிக்காவின் ஏபி டி வில்லியர்ஸ்.

அந்த இருவருக்கும் இரசிகர்களாக இருப்பவர்கள், தங்களது விருப்பத்துக்குரிய வீரர், எவ்வாறு உலகில் சிறந்தவர் என்பதற்கான வாதங்களை முன்வைப்பர். ஆனால், அவர்களிருவருமே ஒரே அணியில் விளையாடும் போது, அந்த சுவாரசியம் புதுவிதமானது.

இந்தியன் பிறீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடரில் றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக இருவருமே விளையாடி வருவதோடு, இருவரும் இணைந்து, அவ்வணிக்கு அதிகமான வெற்றிகளைப் பெற்றுக்கொடுத்து, வெளியேறும் நிலையிலிருந்து, இறுதிக்கட்டப் போட்டிகளுக்கு அழைத்து வந்தனர்.

இறுதிக்கட்டப் போட்டியில் நேற்று குஜராத் லயன்ஸ் அணிக்கெதிரான போட்டியில், கடினமான ஆடுகளமொன்றில் 159 என்ற இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய பெங்களூர் அணி சார்பாக விராத் கோலி விரைவாக ஆட்டமிழக்க, இரண்டாவது ஓவரிலேயே டி வில்லியர்ஸ் களமிறங்கினார். ஒரு கட்டத்தில் 5.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 29 ஓட்டங்களுடன் அவ்வணி தடுமாறியது. அடித்தாடிய ஸ்டுவேர்ட் பின்னியும் ஆட்டமிழக்க, 9.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 68 ஓட்டங்களுடன் காணப்பட்ட அவ்வணிக்கு, 62 பந்துகளில் 91 ஓட்டங்கள் தேவை என்ற நிலை காணப்பட்டது.

அதன் பின்னர் பொறுமையாகவும், பின்னர் தேவையான நேரத்தில் அதிரடியாகவும் விளையாடிய ஏபி டி வில்லியர்ஸ், இக்பால் அப்துல்லா 25 பந்துகளில் ஆட்டமிழக்காமல் பெற்ற 33 ஓட்டங்களின் துணையுடன், 18.2 ஓவர்களில் வெற்றியிலக்கை அடைய பெங்களூர் அணிக்கு உதவினார்.

47 பந்துகளில் 5 நான்கு ஓட்டங்கள், 5 ஆறு ஓட்டங்கள் உள்ளடங்கலாக ஆட்டமிழக்காமல் 79 ஓட்டங்களைப் பெற்ற ஏபி டி வில்லியர்ஸ், போட்டியின் நாயகன் விருதையும் வென்றார்.

அணிக்கு வெற்றிவாய்ப்பே இல்லாதிருந்த நிலையில், அணிக்கு வெற்றி கிடைத்த மகிழ்ச்சியில் இருந்த அணித்தலைவர் விராத் கோலி, ஏபி டி வில்லியர்ஸூக்குப் பாராட்டு மழை பொழிந்தார். 'நம்ப முடியவில்லை. நான் தான் வெற்றிபெற்ற தலைவர் என்பதை நம்ப முடியவில்லை' எனத் தெரிவித்த கோலி, அதன் பின்னர், சிறந்த துடுப்பாட்ட வீரர் யார் என்ற விவாதம் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்தார். 'தற்போதுள்ளவர்களில் சிறந்தவர் யார் என்ற அதிகளவிலான விவாதங்களை, அது முடிக்க வேண்டும். அதில் எந்தக் கேள்வியும் இல்லை. 'பெரிய போட்டி வரும் போது, பெரியவர்கள் முன்வருவார்கள். அவருக்கு நான் தலைவணங்குகிறேன். நான் பார்த்தவற்றில், அழுத்தத்துக்கு மத்தியில் பெறப்பட்ட மிகச்சிறந்த இனிங்ஸ்களில் அதுவும் ஒன்று" எனத் தெரிவித்தார்.

இவ்வாறு தெரிவித்த கோலி, சாதாரணமானவரல்லர். அழுத்தத்துக்கு மத்தியில், அநாயசமாக ஓட்டங்களைப் பெறுவதில் தன்னை நிரூபித்தவர். இந்த ஐ.பி.எல் தொடரிலும், இதுவரை 4 சதங்களைக் குவித்து, தொடரில் அதிக ஓட்டங்களைக் குவித்தோரின் பட்டியலில், முதலிடத்தில் காணப்படுகிறார். அதிக ஆக்ரோஷத்துக்குப் பெயர்போன விராத் கோலி, அதியுச்ச திறமையொன்றுக்குக் கொடுக்கும் மரியாதை, அவரையும் ஏபி டி வில்லியர்ஸையும் மெச்ச வைக்கிறது என்பது தான் உண்மை.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .