
உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடரின் இறுதிப் போட்டி இன்று, ஆர்ஜன்டீனா - ஜேர்மனி அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ளது. இலங்கை நேரப்படி நள்ளிரவு தாண்டி (நாளை அதிகாலை) 1.30 மணிக்கு இந்தப் போட்டி நடைபெறவுள்ளது.
அரை இறுதிப் போட்டியில் ஜேர்மனி அணி 7 இற்கு 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியது. ஆர்ஜன்டீனா அணியானது நெதர்லாந்து அணியை 4 இற்கு 2 என்ற பனால்டி உதை மூலம் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தெரிவாகியது. அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்று ஆர்ஜன்டீனா அணி இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளது. ஜேர்மனி அணி குழு நிலைப் போட்டிகளில் ஒரு போட்டியில் சமநிலை முடிவைப் பெற்றது.
ஜேர்மனி அணி இறுதிப் போட்டிக்கு ஒன்பதாவது தடவையாக தெரிவாகியுள்ளது. ஜேர்மனி அணி 3 தடவைகள் சம்பியன் பட்டத்தை வென்றுள்ள அதேவேளை, ஐந்து தடவைகள் இரண்டாமிடத்தையும் பெற்றுள்ளது. ஆர்ஜன்டீனா அணி ஐந்தாவது தடவையாக இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது. இதில் இரண்டு தடவைகள் சம்பியன் பட்டம் வென்றுள்ள அதேவேளை இரண்டு தடவைகள் இரண்டாமிடத்தைப் பெற்றுள்ளது.
ஜேர்மனி, ஆர்ஜன்டீனா அணிகள் இரண்டாவது தடவையாக இறுதிப் போட்டியில் மோதுகின்றன. 1990ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரில் ஜேர்மனி அணி முதலிடத்தையும், ஆர்ஜன்டீனா அணி இரண்டாமிடத்தையும் பெற்றது.
இரு அணிகளும் இதுவரை 20 போட்டிகளில் மோதியுள்ளன. ஆர்ஜன்டீனா அணி 9 போட்டிகளில் வெற்றியையும், ஜேர்மனி அணி 6 போட்டிகளிலும் வெற்றியை பெற்றுள்ள அதேவளை, 5 போட்டிகளை சமநிலையில் நிறைவு செய்துள்ளன. இரு அணிகளுக்கும் சம வாய்ப்புக்கள் உள்ள இந்தப் போட்டி அதி விறு விறுப்பாக அமையும் என எதிர்பார்க்கபடுகின்றது.