உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடர் 2014 இன் சம்பியன் பட்டத்தை ஜேர்மனி அணி கைப்பற்றியுள்ளது. நான்காவது தடவையாக ஜேர்மனி அணி சம்பியன் பட்டத்தை கைப்பற்றியள்ளது.
ஆர்ஜன்டீனா, ஜேர்மனி அணிகளுக்கிடையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் முதல் 90 நிமிடங்களில் இரு அணிகளும் கோல்கள் எதனையும் பெறவில்லை. மேலதிக நேரத்தில் 113ஆவது நிமிடத்தில் மரியா கொட்ஷே அடித்த கோல் மூலம் ஜேர்மனி இந்த வெற்றியைப் பெற்றுக் கொண்டது.
1990ஆம் ஆண்டு இந்த இரு அணிகளும் மோதி ஜேர்மனி அணி வெற்றி பெற்றது. அதன் பின்னர் 2002ஆம் ஆண்டு ஜேர்மனி இறுதிப் போட்டிக்குத் தெரிவாகிய போதும் இரண்டாமிடத்தையே பெற்றது. ஐந்தாவது தடவையாக இறுதிப் போட்டியில் விளையாடிய ஆர்ஜன்டீனா தோல்வியை சந்தித்துள்ளது.
இரண்டு தடவைகள் வெற்றிகளையும் மூன்று தடவைகள் தோல்விகளையும் ஆர்ஜன்டீனா அணி சந்தித்துள்ளது. இறுதிப் போட்டியில் ஆர்ஜன்டீனா அணி இலகுவாக கோல் பெறும் சந்தர்ப்பங்களை இரு தடவைகள் தவறவிட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த வருட உலகக் கிண்ண தொடரின் சிறந்த வீரராக ஆர்ஜன்டீனா அணியின் லியனல் மெஸ்ஸி தெரிவு செய்யப்பட்டார். தங்க பந்து விருதை மெஸ்ஸி பெற்றுக் கொண்டார். சிறந்த கோல் காப்பாளர் விருதை ஜேர்மனி அணியின் மானுவேல் நியுவர் பெற்றுக் கொண்டார். அவருக்கு தங்க கையுறை விருது வழங்கப்பட்டது.