2026 ஏப்ரல் 08, புதன்கிழமை

புதிய அனுசரணையாளரை தேடுகிறது பங்களாதேஷ்

A.P.Mathan   / 2015 ஏப்ரல் 04 , மு.ப. 09:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது தேசிய அணிக்கான புதிய அனுசரணையாளரைத் தேடுவதாக பங்களாதேஷ் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை அறிவித்துள்ளது. இதனடிப்படையில், தற்போதைய அணியின் அனுசரணையாளராக இருந்துவந்த 'சஹாரா இந்தியா பரிவார்' நிறுவனத்தின் இணை நிறுவனமான 'அம்பி வலி'யுடனான ஒப்பந்தத்தை பங்களாதேஷ் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை முடித்துக்கொண்டுவிட்டதாகத் தெரிகிறது.

8 வருடங்களாக அணியின் அனுசரணையாளராக இருந்துவந்த 'கிரமீன் போன்' நிறுவனத்துடனான ஒப்பந்தம் நிறைவுபெற்றவேளையில், 2012ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் நடாத்தப்பட்ட ஏலத்தில் வெற்றிபெற்றதன் மூலம், பங்களாதேஷ் தேசிய அணியினதும், தேசிய பயிற்சி மையத்தினதும் அனுசரணையாளராக 'அம்பி வலி' ஒப்பந்தம் செய்யப்பட்டது. சுமார் 14 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என்ற அடிப்படையில் நான்கு வருடங்களுக்கு இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. 

இந்த ஒப்பந்தமானது 2016ஆம் ஆண்டு ஜூன் மாதமே முடிவுக்கு வரவேண்டும். ஆயினும், மார்ச் 30ஆம் திகதி பங்களாதேஷ் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை வெளியிட்டுள்ள பத்திரிகை விளம்பரத்தில் புதிய அனுசரணையாளருக்கான கேள்விப்பத்திரங்கள் கோரப்பட்டுள்ளன. 

சஹாரா நிறுவனம் பெரும் நிதி நெருக்கடியில் இருப்பதும், அதன் மீதான வழக்குகளினால் நிறுவனத்தின் மீதான அழுத்தங்கள் அதிகரித்திருப்பதும் பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் இந்த ஒப்பந்த முறிவுக்குக் காரணங்களாகக் கருதப்படுகின்றன.

பாகிஸ்தானுடனான தொடருக்கு முன்னதாக புதிய அனுசரணையாளருடன் ஒப்பந்தம் மேற்கொள்ள பங்களாதேஷ் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை தீர்மானித்திருப்பதாக நமக்குக் கிடைத்திருக்கும் தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

இந்திய கிரிக்கெட் அணியின் நீண்ட கால அனுசரணையாளராக இருந்த சஹாரா நிறுவனம், 2012ஆம் ஆண்டில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையுடனான முறுகலைத் தொடர்ந்து அந்த ஒப்பந்தத்தை முறித்துக்கொண்டதோடு, ஐபிஎல் தொடரிலிருந்தும் வெளியேறியிருந்தமை வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .