2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

’உரிமைகளைப் பாதுகாக்கும் பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு’

Suganthini Ratnam   / 2017 மே 30 , பி.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன்

சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்கும் சட்ட ரீதியான பொறுப்பு அரசாங்கத்தக்கு உள்ளது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ் தெரிவித்தார்.

தேசிய சகவாழ்வு மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சின் முகாமைத்துவ சுற்றறிக்கை;கு அமைய, மண்முனை மேற்குப் பிரதேச செயலகத்தில் திங்கட்கிழமை (29)  நடைபெற்ற மொழி உரிமை பற்றிய செயலமர்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றியபோது, 'மொழி ரீதியான பிரிவினையைக் காட்டி சிறுபான்மையினர் ஓரம் காட்டப்பட்டால், அது அடிப்படை உரிமை மீறலாகும்.

'அரசியல் அமைப்பின் உத்தரவாதப்;படி ஒருவர் தமது மொழி உரிமையை நாட்டில் எத்திசையிலாவது பயன்படுத்த முடியும் என்பதால், மொழி ரீதியான பிரிவினையைக் காட்டி சிறுபான்மையினர் ஓரம் காட்டப்படலாகாது.  

'அண்மைக்காலமாக சிறுபான்மையினரின் உரிமைகள் தொடர்பாக சர்வதேச சமூகத்தின் கவனமானது மிகக் கூடுதலாக இருக்கின்றது. இருந்த போதிலும், ஒரு நாட்டின் சமூக, பொருளாதார அரசியல் அபிவிருத்தியைத் தீர்மானிக்கும் பொறுப்பு இறைமைமிக்க ஓர் அரசுக்குரியதாகும்' என்றார்.

'இலங்கை -இந்திய ஒப்பந்தம் 1988ஆம் ஆண்டு கைச்சாத்திட்டதன் பிரகாரம், அரசியல் அமைப்பின் 13ஆவது  திருத்தத்தின் மூலம் தமிழ்மொழி உத்தியோக மொழியாக ஆக்கப்பட்டதைத் தொடர்ந்து சிங்களத்துடன் தமிழும், நிர்வாக மொழியாகவும் நீதிமன்ற மொழியாகவும் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இத்திருத்தத்தின்படி, எந்த நபரும் சிங்களத்தில் அல்லது தமிழில் தொடர்பு கொள்ளவும் பதிலைப் பெறவும் அரசியலமைப்பின் 13ஆவது  திருத்தம் உரிமையளிக்கின்றது.

'இலங்கை அரசியலமைப்பு யாப்பின் நான்காம் அத்தியாயத்தில் இலங்கையின் தேசிய மொழிகள் சிங்களமும் தமிழும் ஆதல் வேண்டும் எனக்  குறிப்பிடப்பட்டுள்ளதால், மொழிக்கான பாதுகாப்பு சட்ட ரீதியாக அரசியலமைப்பில் வழங்கப்பட்டிருப்பது பெருமைக்குரியது.

'அரசாங்கத்தினால் ஆக்கப்படுகின்ற சட்டங்கள், சுற்றறிக்கைகள் உள்ளிட்ட படிவங்கள்  ஆவணங்கள் இரு தேசிய மொழிகளிலும் வெளியிடப்படல் வேண்டும்.

இவ்விடயங்களில் எமது நாட்டில் முன்னேற்றம் போதாமையாகவுள்ளது. சில மொழிபெயர்ப்புகளில் ஏற்படும் தவறுகள் காரணமாக சில தகவல்களை விளங்கிக்கொள்ள முடியாத நிலைமை இருக்கத்தான் செய்கிறது.

இலங்கையில் சகல மக்களும் அச்சமின்றி பாதுகாப்பாக வாழ வேண்டும், மனித கௌரவம் மதிக்கப்பட வேண்டும். பொது வாழ்க்கையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நியமங்கள் சமமாக மதிக்கப்பட வேண்டும். சகல சமுதாயங்களும் தமது தனித்துவம் பற்றி எடுத்துக்கூறவும், மொழியினை பயன்படுத்தி நாட்டில் சகல விடங்களிலும் பூரண பங்கு கொள்ளவும் இடமளிக்கப்படல் வேண்டும்' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .