2021 ஜூன் 19, சனிக்கிழமை

இந்தியா எமக்கு விடுதலை பெற்றுத்தருமென கனவில் கூட நினைக்க முடியாது - சந்திரகாந்தன்

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 09 , மு.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கே.எஸ்.வதனகுமார், ஜௌபர்கான்)

இந்திய தேசம் வந்து எமக்கு விடுதலை பெற்றுத்தருமென்று நாம் ஒருபோதும் கனவு காண முடியாது. அதனால் இந்தியாவை நம்பி ஏமாற்றமடைய வேண்டாம் என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

இலங்கையில் தமிழர்களின் பிரச்சினையென்று ஒன்று இல்லையென்ற உறுதியான நிலைப்பாட்டில் அவர்கள் உள்ளனர். தமிழ் மக்களின் பிரச்சினை வேறு எங்கோ தீர்க்கப்பட்டதாக தெரிவிக்கின்றனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். களுதாவளையில் கடந்த செவ்வாயன்று மீன்பிடி சங்கங்களுக்கான மீன்பிடி உபகரணங்களை வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய முதலமைச்சர், "ஸ்ரீ சட்டம், தனிச்சிங்கள சட்டம் கொண்டுவரப்பட்டபோது அதற்கெதிராக எமது அரசியல்வாதிகள் போராட்டம் நடத்தியமை தமிழ் தலைவர்கள் அடிவாங்கியமை என்பது வேறுகதை. அன்று இருந்த ஊடகங்கள், உலகம் இன்று இல்லை. இன்று எல்லாம் மாறி நிற்கின்றன.

இன்று எமது உரிமையினை வென்றெடுக்க வேண்டும் என்றால், நாங்கள் வெகுஜன போராட்டங்களை செய்யவேண்டும், பெரும் ஆர்ப்பாட்டங்களை நடத்த வேண்டும், பாரியளவிலான மாற்றங்களை ஏற்படுத்தவேண்டும். ஜனநாயகத்தை அடித்துப்பேசுகின்ற, அதனைப் பெற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுத்திட்டத்துக்கு நகரக்கூடிய விடயங்களை ஏற்படுத்த வேண்டும்.

சில நாட்களுக்கு முன்னர் இந்திய வெளியுறவு செயலர் தலைமையிலான குழுவினரை நான் சந்தித்திருந்தேன். அவர்கள் அவர்களது கருத்திலே தெளிவாக இருக்கின்றனர். இலங்கையில் தமிழர்களின் பிரச்சினையென்று ஒன்று இல்லையென்ற உறுதியான நிலைப்பாட்டில் அவர்கள் உள்ளனர். தமிழ் மக்களின் பிரச்சினை வேறு எங்கோ தீர்க்கப்பட்டதாக தெரிவிக்கின்றனர்.

ஆகையினால் அவர்களை இன்னும் நம்பிக்கொண்டு ஏமாந்து விடமுடியாது. ஐ.நா.வோ அல்லது இந்தியாவோ எமக்கு அள்ளித்தந்துவிடும் என்ற சாத்தியமில்லாத நிலைப்பாட்டை மாற்றவேண்டும்.

எங்களது மக்கள், எங்களது அரசியல் பலம் இதற்குள்தான் எங்களது மக்களை பாதுகாத்து எங்களது அடையாளங்களை காப்பாற்றிக்கொள்ளலாமே ஒழிய மாறாக எங்கிருந்தோ சம்பந்தன் ஐயாவோ, வேறுயாரோ பெற்றுத்தருவர்கள் என்று நீங்கள் இன்னமும் நம்பியிருந்து ஏமாற்றமடைந்தால் அதனை எங்களால் தடுக்கமுடியாது.

இன்று நாட்டிலே அரசியல் ரீதியாக பாரிய இடிபாடுகள் நிகழ்ந்துகொண்டிருக்கின்ற நிலையில், புலம்பெயர்ந்த மக்களிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பு பேசுகின்ற விடயம் கோயிலைக் கட்டவேண்டும் என்பதாகும். இது வெட்கப்பட, வேதனைப்பட வேண்டிய விடயமாகும்.

கோயில் கட்டுவதென்றால் எமது மண்ணிலே உள்ள மக்கள் அதனை செய்வார்கள். அவர்கள் உழைத்தால் அதன்மூலம் செல்வம் கொழித்தால் அவர்கள் அதனைக்கொண்டு கோயில் கட்டுவார்கள்.

எங்களது அடையாளங்களை நாங்கள் பாதுகாத்து வந்துள்ளோம். இதனை அங்குபோய் பேசுவதன் காரணமாக இங்குள்ள தேசிய பத்திரிகைகளிலும் எதிரொலித்து இங்கு இன்னும் இருக்கின்ற பிரச்சினைகளை அதிகரிப்பதோடு இருக்கின்ற நிலைமையினை மோசமாக்கின்ற வகையில் செயற்பாடுகள் அமையப் போகின்றன.

ஆகையினால் சம்பந்தமில்லாத விடயங்களை பேசுவதும் எந்த இடத்துக்கு நாம் செல்லப் போகின்றோம்? இலட்சியங்களுக்கு தள்ளித்தள்ளி எமது மக்களை மிகமோசமாக பலவீனப்படுத்தியுள்ள கட்சிகளை இன்னும் தூக்கி நிறுத்தினால் எங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .