2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

‘அரசியல் உணர்வு இல்லாத இனம் அழிந்துவிடும்’

Editorial   / 2018 மே 22 , பி.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

கே.எல்.ரி.யுதாஜித், எம்.எம்.அஹமட் அனாம், பேரின்பராஜா சபேஷ்

அரசியல் உணர்வு இருக்கின்ற போதுதான், மொழி, இனம், இருப்பிடம் எல்லாம் பாதுகாக்கப்படும் எனத் தெரிவித்த, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம், சமுதாயத்திலே அரசியல் உணர்வு இல்லாத ஓர் இனம் அழிந்துவிடும் எனவும் தெரிவித்தார்.

வாகரை, கட்டுமுறிவு மீனவர் கூட்டுறவுச் சங்கத்துக்கு முன்னாள் விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கமின் 2017ஆம் ஆண்டுக்குரிய பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டின் மூலம் ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான வலைகள் வழங்கி வைக்கப்பட்டன.

மட்டக்களப்பு, நீரியல்வள உத்தியோகத்தர் க.கேதாகரன் தலைமையில் நேற்று (21) மாலை இடம்பெற்ற இந்நிகழ்வில் அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “நாங்கள் இந்த நாட்டிலே, தமிழர்கள் என்ற உணர்வோடு வாழ வேண்டும். நாட்டில் தமிழர்கள் வாழ்ந்த இடங்கள் பல, இன்று மாற்றப்பட்டு இருக்கின்றன. அந்தத் தமிழர்கள் யாரும் அழிக்கப்படவில்லை. எனினும், தமது இனம், மொழி என்ற எண்ணங்கள் இல்லாமலே மாற்றமடைந்திருக்கின்றார்கள்.

“சிலாபம், காலி, கதிர்காமம் போன்ற பல நமது பிரதேசங்கள், அவ்வாறு மாற்றமடைந்துள்ளன. ஏனெனில், அங்கெல்லாம் எமக்கான சிறந்த தலைமைத்துவம் இருக்கவில்லை.

“ஆனால், வடக்கு, கிழக்கில் அவ்வாறானதொரு தலைமைத்துவம் இருப்பதன் காரணமாகத்தான், நாங்கள் தற்போதும் தமிழர்கள் என்ற பெயரோடு இருக்கின்றோம்" என்று தெரிவித்தார்.

தற்போதுள்ள தமிழர்கள், தொடர்ந்தும் தமிழர்களாக இருப்பதற்கு, பெற்றோரே காரணமெனத் தெரிவித்த அவர், தற்போதுள்ள சந்ததியினர், எதிர்காலச் சந்ததியினரைத் தமிழர்களாக வைத்திருக்க வேண்டுமெனவும், அதற்கான உறுதிப்பாடு அவசியமெனவும் குறிப்பிட்டார். இதற்காக, அரசியல் என்ற விடயத்தில், அக்கறை கொண்டவர்களாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

“இதற்காக, நம்மை வழிநடத்துகின்ற சிறந்ததொரு தலைமைத்துவத்தின் பின்னே நாங்கள் அணிவகுத்து நிற்க வேண்டும். தனித்தனியே நாங்கள் அதைச் சாதிக்க முடியாது” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X