2025 மே 01, வியாழக்கிழமை

’இந்த ஆட்சிக்கு வாக்களித்தவர்களே இளைஞர்களின் கைதுக்கு பொறுப்பு’

Princiya Dixci   / 2020 டிசெம்பர் 02 , பி.ப. 07:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா

கிழக்கு மாகாணத்தில் தற்போது இளைஞர்கள் கைதுசெய்யப்படுவதற்கு, கடந்த ஆட்சிக் காலத்தைக் குறைகூறிக்கொண்டு, இந்த ஆட்சிக்கு வாக்களித்தவர்களே பொறுப்பேற்கவேண்டுமென, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

மட்டு. ஊடக அமையத்தில் நேற்று  (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இதனை தெரிவித்தார். 
இதன்போது அவர் தொடர்ந்தும் கருத்துரைக்கையில், “கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலும் சிறுபிள்ளைத்தனமான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு, பல இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். விடுதலைப் புலிகளின் தலைவரின் படத்தை பேஸ்புக்கில் பதிவிட்டிருந்ததையும் குற்றமாகக் கொண்டு சிலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

“இவர்கள் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு, ஒரு சிலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், சிலர் பொலிஸ் நிலையங்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். மேலும், சிலர் விளக்கமறியலிலும் வைக்கப்பட்டுள்ளனர். 

“நல்லாட்சி இருந்த காலப் பகுதியில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விமர்சித்து ஒரு மாற்றம் உருவாகவேண்டும் என்று தமிழ்த் தேசியத்துக்கு எதிராக வாக்களித்த ஒவ்வொருவரும் இந்த இளைஞர்களின் கைதுவிடயத்தில் பொறுப்புக்கூற வேண்டும். கடந்த ஆட்சிக் காலத்தில் நல்லிணக்கம் இருந்ததன் காரணமாக, நாங்கள் சுதந்திரமாக செயற்பாடுகளை முன்னெடுத்தோம்.

“ஆனால், இன்று மாவீரர்களை நினைவுகூருவதைத் தடுப்பதற்கும் தமிழர்களின் உணர்வின் அடையாளங்கள் அழிக்கவும் தற்போதைய அரசாங்கம் பல திட்டமிட்ட செயற்பாடுகளை முன்னெடுத்துவருகின்றது. இதன் பொறுப்பு கோட்டாவுக்கும் மஹிந்தவுக்கு வாக்களித்தவர்களையே சாரும்” என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .