2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

‘இலங்கை அரசாங்கம் கண்டு கொள்ளவில்லை’

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2018 மே 21 , பி.ப. 03:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

பலஸ்தீன மக்கள் மீதான தாக்குதல்களை இலங்கை அரசாங்கம் கண்டு கொள்ளவில்லை எனக் குற்றஞ்சாட்டியுள்ள நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, இது பெரும் ஏமாற்றத்தை தருகிறது எனவும் குறிப்பிட்டுள்ளது.

பலஸ்தீன ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது, இஸ்‌ரேலியப் படையினரால் அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதலில், குறைந்தது 60 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருந்தமை தொடர்பாகவும் அதற்கான இலங்கையின் எதிர்வினை தொடர்பாகவும், முன்னணியால் இன்று (21) விடுக்கப்பட்ட ஊடக அறிக்கையிலேயே, அரசாங்கம் மீது மேற்கூறப்பட்ட விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.

இஸ்‌ரேல் உருவாக்கப்பட்டு, இம்மாதம் 15ஆம் திகதியுடன், 70ஆவது ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், "பலஸ்தீன மக்கள் மீதான இஸ்‌ரேல் ஆக்கிரமிப்பு இடம்பெற்று 70 ஆண்டுகள்" என, முன்னணி வர்ணித்துள்ளது.

“பலஸ்தீன மக்கள், தமது பூர்வீக பூமியை இஸ்‌ரேல் ஆக்கிரமிப்பாளர்களிடம் இழந்து ஏழு தசாப்தங்களைக் கடந்த நிலையில், பலஸ்தீன மக்களினதும் உலக முஸ்லிம்களினதும் புனிதத் தலங்களில் ஒன்றான மஸ்ஜிதுல் அக்ஸா அமைந்துள்ள ஜெருசலேத்தில் ஐக்கிய அமெரிக்கா, தனது இஸ்‌ரேலுக்கான தூதரகத்தை, கடந்த 15ஆம் திகதி நிறுவியது.

“ஐ.அமெரிக்காவினதும் இஸ்‌ரேலினதும் தலைப்பட்சமான இந்த முடிவு, பலஸ்தீன மக்களின் விடுதலையை மேலும் கேள்விக்குறியாக்கியுள்ளது. அத்துடன் பலஸ்தீன மக்களுக்கு நீதியும் நியாயமும் விடுதலையும் கிடைக்க வேண்டும் எனக் குரல் கொடுத்து வரும் ஒட்டுமொத்த உலக மக்களுக்கும், இவ்விடயம் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐ.அமெரிக்காவின் இம்முடிவுக்கு, உலகளாவிய ரீதியில் பல நாடுகளும் கண்டனங்களை வெளிப்படுத்துவதைச் சுட்டிக்காட்டிய இலங்கை, இலங்கை அரசாங்கமோ அல்லது ஜனாதிபதியோ இது தொடர்பில் எந்தவிதமான கருத்தும் தெரிவிக்காமல் இருப்பதைச் சுட்டிக்காட்டி, அந்நிலைமை, பெரும் கவலையையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது எனக் குறிப்பிட்டது.

“இலங்கையின் தற்போதைய அரசாங்கத்தின் இந்த நிலைப்பாடு குறித்து, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தமது திருப்தியின்மையைத் தெரிவிப்பதுடன், பலஸ்தீன விவகாரத்தில் எமது நாட்டின் வழமையான நிலைப்பாட்டையே இந்த அரசாங்கமும் தொடர்ந்தும் கடைப்பிடிக்கவேண்டும் எனவும் வேண்டிக்கொள்கிறது.

“உலக சமாதானத்துக்காகவும் பலஸ்தீன மக்களின் விடுதலைக்காகவும் குரல் கொடுத்து வரும் இலங்கை மக்களாகிய நாம், எமது அரசாங்கத்தின் மீது இது குறித்த அழுத்தங்களைப் பிரயோகிக்க முன்வரவேண்டும் எனவும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி வேண்டுகோள் விடுக்கிறது” என, அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .