2025 மே 06, செவ்வாய்க்கிழமை

இலங்கையின் மீன்வளத்தை பெருக்கி இலாபம் ஈட்ட நடவடிக்கை

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 25 , மு.ப. 08:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன், எம்.எம்.அஹமட் அனாம், ஆர்.ஜெயஸ்ரீராம்,எஸ்.பாக்கியநாதன்

இலங்கையின் மீன்வளத்தைப் பெருக்கி சர்வதேச தரத்துக்கு உயர்த்தி இலாபம் ஈட்டக்கூடியதாக அதனை ஆக்குவதற்குரிய எல்லா வகையான நடவடிக்கைகளையும் இலங்கை முன்னெடுத்துள்ளதாக மீன்பிடி மற்றும் நீரியல்வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்துக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை  விஜயம்  செய்த அமைச்சர், ஏறாவூரில் சுமார் 03 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட வாவி மீன் விற்பனை நிலையத்தை  திறந்துவைத்தார். அத்துடன், வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்தை அமைச்சர் பார்வையிட்டதுடன்,  பிரதேச மீனவ அமைப்புக்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டார். இந்த நிகழ்வுகளின்போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு மேலும் தெரிவித்த அமைச்சர், 'ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை மீன்களுக்கான தடை அடுத்த மாதமளவில் முற்றாக நீங்கிவிடுமென்று எதிர்பார்க்கப்படுகின்றது' என்றார்.

'மீன்களைப் பாதுகாத்து வைத்து விற்பனை செய்ய முடியாதது இலங்கை மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரதான பிரச்சினையாகும்' எனவும் அவர் தெரிவித்தார்.

'இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்களினால் கடல் வளத்துக்கு பாதிப்பு ஏற்படுகின்றது.
இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடுவதால், குறிப்பாக வடபகுதி மீனவர்கள் பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர். அவ்வாறே, தற்போது இந்திய மீனவர்களின் அத்துமீறலினால்  கிழக்கு மாகாண மீனவர்களும் பாதிப்பை எதிர்நோக்குகின்றனர்' என்றார்.  

'இந்திய மீனவர்களின் அத்துமீறல் மிக நீண்டகாலமாக இருந்துவருகின்ற பிரச்சினையாகும்' எனவும் அவர் தெரிவித்தார்.  

மீனவர்களின் நன்மை கருதி கலங்கரை விளக்கு அமைத்துத் தருமாறு பிரதேச மீன அமைப்புகள் விடுத்த வேண்டுகோளை அடுத்து, வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள புல்லாவிப் பகுதியில்  கலங்ரை விளக்கு அமைத்துத் தருவதாகவும் அமைச்சர் உறுதியளித்தார்.

இதன்போது, தெரிவுசெய்யப்பட்ட 15  கடற்றொழிலாளர்களுக்கு மீன்பிடி வலைகள் வழங்கப்பட்டன.  இதன் பின்னர், கடற்றொழில் கூட்டத்தாபனத்துக்குச் சென்று மீன்களை பழுதுபடாமல் பாதுகாக்கும் குளிரூட்டிகள் மற்றும் அமைவிடங்களைப் அமைச்சர் பார்வையிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X