2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

கறுப்பு செப்டெம்பர் வேண்டும்: பொன்.செல்வராசா

Gavitha   / 2016 செப்டெம்பர் 10 , மு.ப. 09:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா

'செப்டெம்பர் மாதத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவான தமிழ் மக்கள் கொலைச் செய்யப்பட்டதன் காரணத்தினால், செப்டெம்பர் மாதம் 'கறுப்பு செப்டெம்பர்' மாதமாக பிரகடனப்படுத்தப்படல் வேண்டும்' என்று என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா கோரிக்கை விடுத்துள்ளார்.

மட்டக்களப்பில் நேற்று வெள்ளிக்கிழமை (09) நடைபெற்ற சத்துருக்கொண்டான் படுகொலை நினைவு தினத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

'இன்று இவ்வாறான நினைவுதினத்தில் மக்கள் வெள்ளம்போல் திரண்டுவரக்கூடிய நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.

2014ஆம் ஆண்டு இங்கு விளக்கேற்றிவந்தபோது பொலிஸார் எங்களை விரட்டினர். அதன்காரணமாக கொக்குவில் காளியம்மன் ஆலயத்தில் நாங்கள் விளக்கேற்றி அஞ்சலி செலுத்திய நிலையை, இதன்போது எண்ணிப்பார்க்க வேண்டியுள்ளது. இன்று இந்நாட்டில் நல்ல அரசாங்கம் ஏற்பட்டுள்ளதால், சுதந்திரமாக இந்த நினைவுகூரலை செய்துகொண்டுள்ளோம்' என்று அவர் குறிப்பிட்டார்.

'செப்டெம்பர் மாதம் வந்ததும் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவான மக்கள் கண்ணீர்சிந்தும் நிலையே இருந்து வருகின்றது. அண்மைய புள்ளிவிவரங்களின் அடிப்படையில் இலங்கையில் செப்டெம்பர் மாதத்தில் படுகொலைசெய்யப்பட்டவர்கள் மட்டக்களப்பு மக்கள் என்பதை சுட்டிக்காட்டுகின்றது.

1983ஆம் ஆண்டு இலங்கையில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டு கறுப்பு ஜுலை எப்படி அமைந்ததோ அதேபோன்று மட்டக்களப்பில் செப்டெம்பர் மாதம் அமைந்துள்ளதனால்,  அதனை 'கறுப்பு செப்டெம்பர்' மாதமாக பிரகடனப்படுத்தப்படல் வேண்டும். அப்போதுதான் மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வாறான சம்பவங்கள் தொடர்ச்சியாக நினைவுகூரப்பட்டு எதிர்கால சந்ததியும் அதனை பின்பற்றிச்செல்லும் நிலையிருக்கும்' என்று அவர் கோரிக்கை விடுத்தார்.

'இன்று பத்திரிகைகளில் எமது படுகொலைகளை வெளிக்கொணரும் வகையில் அரசாங்கம் சுதந்திரத்திரத்தை வழங்கியுள்ளது. அச்சமில்லாமல் எழுதும் தற்துணிவு இன்று ஏற்பட்டுள்ளது' என்றும் அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X