2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

கல்வி வீழ்ச்சிக்கு, மாகாண கல்வித் திணைக்களம் ‘பொறுப்புக்கூற வேண்டும்’

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2018 ஏப்ரல் 24 , பி.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களின் கல்வி வீழ்ச்சிக்கு, மாகாண கல்வித் திணைக்களம் பொறுப்புக்கூற வேண்டுமென, இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. இந்நிலைமைக்கு, அரசியல் தலையீடுகள் காணப்படுகின்றன எனவும் குற்றஞ்சாட்டப்படுகிறது.
அண்மையில் வெளியான க.பொ.த க.பொ.த (சா/த) பரீட்சை முடிவுகளின்படி, இலங்கையின் 25 மாவட்டங்களில் மட்டக்களப்பு மாவட்டம் 22ஆவது நிலையிலும், திருகோணமலை மாவட்டம் 23ஆவது நிலையிலும் காணப்படுகின்றன. ஒட்டுமொத்தமாக, கிழக்கு மாகாணம், 8ஆவது இடத்தில் காணப்படுகிறது.
இந்நிலைமை தொடர்பாக, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாட்டத்துக்கான செயலாளர் பொன்னுத்துரை உதயரூபன், அறிக்கையொன்றை இன்று (24) வெளியிட்டு, இந்நிலைமையை, "பாரிய வீழ்ச்சி" என வர்ணித்தார்.
“இந்தப் பின்னடைவுக்கு, கிழக்கு மாகாண கல்வித் திணைக்களமே பொறுப்புக்கூற வேண்டும்.
“மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில் அமைந்துள்ள சில கல்வி வலயங்கள், அரசியல் நிகழ்ச்சிநிரல்களை அமுல்படுத்துவதில் ஈடுபட்டதோடு, முழுமையாக அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளமை போன்ற செயற்பாடுகளுமே, கல்வி வீழ்ச்சிக்கான பிரதான காரணமாக அமைந்துள்ளதென, கல்விப் புலத்திலுள்ள நோக்கர்களால் சுட்டிக்காட்டப்படுகின்றது" என்று, அவர் குறிப்பிட்டார்.
மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில், தகுதியான வலய கல்விப் பணிப்பாளர்களையும் கல்வி அதிகாரிகளையும் நியமிப்பதற்கு, அரசியல்வாதிகள் தடையாக இருக்கின்றனர் எனக் குற்றஞ்சாட்டிய அவர், "சட்டத்துக்கு முரணான உதவி கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், அதிபர்கள் ஆகியோர், மாகாண கல்வித் திணைக்களத்தால் நியமிக்கப்பட்டமையும், ஆசிரியர்கள் இடமாற்றமும் மற்றொரு காரணமாக உள்ளது” எனக் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X