2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

கிரா​மசேவகர், பொலிஸார் முன்னிலையில் கைகலப்பு; எண்மர் கைது

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2018 ஓகஸ்ட் 26 , பி.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு - கரடியனாறு பொலிஸ் நிலையத்திலும் இலுப்படிச்சேனை கிராம சேவகர் அலுவலகத்திலும் என, இருவேறு இடங்களில் முறைப்பாடு செய்யச் சென்றபோது, கைகலப்பில் ஈடுபட்ட 8 பேரை, பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

குடும்பத் தகராறு ஒன்றைத் தொடர்ந்தே, இவ்வன்முறைகள் நேற்று (25) இடம்பெற்றன. குடும்பத் தகராறு ஒன்றின் காரணமாக, குடும்பங்களைச் சேர்ந்த உறவினர்கள், முதலில் இலுப்படிச்சேனை கிராம சேவையாளரிடம் சென்றுள்ளனர். முறைப்பாடு செய்யச் சென்றவர்கள், கிராம சேவகரின் முன்னிலையில் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டு, கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர்.

குதர்க்கம் செய்து, கைகலப்பில் ஈடுபட்டவர்களை சமரசஞ் செய்து கொள்ள முடியாமற்போன கிராம சேவையாளர், சம்பந்தப்பட்ட நபர்களை, பொலிஸ் நிலையம் செல்லுமாறு ஆலோசனை கூறியுள்ளார்.

அதன்படி கரடியனாறு பொலிஸ் நிலையத்துக்குச் சென்ற இருசாராரும், பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டைப் பதிவுசெய்து கொண்டிருக்கும்போது, மீண்டும் வாய்த்தர்க்கம் செய்து, கைகலப்பிலும் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட 3 பெண்களும் 5 ஆண்களுமாக மொத்தம் 8 பேரை, இதன்போது பொலிஸார் கைது செய்தனர்.

மத்திய கிழக்கு நாடொன்றில் தொழில் புரியும் கணவன் அனுப்பும் பணத்தை வைத்துக்கொண்டு, பெண்ணொருவர் முறைகேடான தொடர்புகளைப் பேணி வருவதாகத் தெரிவித்தே, இக்குடும்பத்தினர் வாய்த்தர்க்கத்திலும் கைகலப்பிலும் ஈடுபட்டனர் என, ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வருவதாக, பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X