2025 ஜூலை 17, வியாழக்கிழமை

‘குற்றப்பத்திரம் வழங்கப்பட்ட ஆசிரியருக்கு பதவி’

Editorial   / 2020 ஜூன் 08 , பி.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

மட்டக்களப்பு கல்வி வலய ஒழுக்காற்று விசாரணையில், கிழக்கு மாகாண கல்விச் செயலாளரால் குற்றப்பத்திரம் வழங்கப்பட்ட ஆசிரியர் ஒருவருக்கு, பதில் உதவிக் கல்விப் பணிப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக, இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

மேற்படி ஆசிரியருக்கு, தொழில்நுட்பப் பாடத்துக்குரிய உதவிக் கல்விப் பணிப்பாளர் நியமனத்தை, குற்றப்பத்திரத்தை வழங்கிய அதே மாகாண கல்விச் செயலாளர் வழங்கியுள்ளாரென, மட்டக்களப்பு மாவட்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் பொன்னுத்துரை உதயரூபன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக ஊடகங்களுக்கு அவர் அனுப்பியுள்ள அறிக்கையில், மேற்படி பதில் நியமனம் தாபன விதிக்கோவை, 1589/30 அதி விசேட வர்த்தமானி அறிவுறுத்தலுக்கமைவாக, வெளிப்படைத் தன்மையின்றிச் செய்யப்பட்டமை சட்ட நியாயங்களைக் கேள்விக்குறியாக்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேற்படி பதில் உதவிக் கல்விப் பணிப்பாளர், மட்டக்களப்பிலுள்ள பிரபல பாடசாலையொன்றின் அதிபரைத் தாக்க முற்பட்டவர் என்பதுடன், தமது சங்கம் மாகாணக் கல்விச் செயலாளரின் கவனத்துக்குக் கொண்டுவந்ததையிட்டும், அதிபரால் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையிலும் விசாரணையில் குற்றப்பத்திரம் வழங்கப்பட்டவர் என்றும் அவர் அதில் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒழுக்கமான கல்விச் சமூகத்தைக் கட்டியெழுப்ப மாகாண கல்விச் செயலாளர் முன்வரவேண்டுமெனவும் கிழக்கு மாகாண கல்வி, அரசியல் மயப்படுத்தப்படுவதை தமது சங்கம் வன்மையாகக் கண்டிப்பதாகவும், சங்க மாவட்டச் செயலாளர் அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X