வா.கிருஸ்ணா / 2019 செப்டெம்பர் 12 , பி.ப. 02:43 - 0 - {{hitsCtrl.values.hits}}

தமிழ் பேசும் மக்கள் மத்தியில் ஆதரவு இல்லாத காரணத்தாலேயே, கோட்டாபய தன்னை சிங்கள இனவாதிகள் போல் காட்ட முற்படுவதாகத் தெரிவித்த மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஹோப் குழுவின் தலைவருமான சுனில் ஹந்துநெத்தி, மஹிந்தவின் குடும்பத்தில் ஒரு செல்லாக்காசாக இருந்தவரே கோட்டாபய ராஜபக்ஷ எனவும் தெரிவித்தார்.
மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய மக்கள் சக்தி அமைப்புக்கும் சில தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான சந்திப்பு, மட்டக்களப்பில் நேற்று (11) மாலை நடைபெற்றது.
மக்கள் விடுதலை முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் க.பிரபு தலைமையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், சுனில் ஹந்துநெத்தி எம்.பி பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
அவர் அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷ அறிவிக்கப்பட்டதே, மஹிந்த தோல்வியடைந்ததை வெளிப்படுத்தியுள்ளதென்றார்.
கோட்டாபய, இலங்கையுடன் எந்தத் தொடர்பும் இல்லாத ஓர் அமெரிக்கப் பிரஜை எனவும் குறைந்தபட்சம் பிரதேச சபை உறுப்பினராகக் கூட அவர் இருந்ததில்லை எனவும் தெரிவித்த ஹந்துநெத்தி எம்.பி, அரசியல் தொடர்பான எந்தவிதமான அறிவும் இல்லாத கோட்டாவுக்கு, மஹிந்தவின் சகோதரர் என்ற அடையாளம் மட்டுமே அரசியலில் உள்ளதாகவும் தெரிவித்தார்.
அத்துடன், தமது அரசியல் இலாபத்தை நோக்காகக் கொண்டு, இனவாதத்தையும் மதவாதத்தையும் கையிலெடுத்துச் செயற்படும் இவர்கள், அரசநிதிகளை மோசடி செய்தமை தொடர்பில் பல வழக்குகள் நடைபெற்றுவருகின்றன எனத் தெரிவித்த அவர், அரச நிதியைத் தமது சொந்த நலன்களுக்குப் பயன்படுத்தியவர்கள் எவ்வாறு நாட்டின் தலைவராக வரமுடியுமெனக் கேள்வியெழுப்பினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .