2025 மே 21, புதன்கிழமை

‘சிறுபான்மைகளைச் சிதறடிக்கும் சதியில் சிக்க வேண்டாம்’

Editorial   / 2017 ஒக்டோபர் 31 , பி.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன், பைஷல் இஸ்மாயில், பேரின்பராஜா சபேஷ்

“கிழக்கில் வாழும் சிறுபான்மைச் சமூகங்களிடையே மோதல்களை உருவாக்கி, தமது அரசியல் சுயலாபங்களை அடைந்து கொள்வதற்காக, விஷம சக்திகளால் தீட்டப்படும் சதித்‪ திட்டங்களில் சிக்கிக் கொள்ள வேண்டாம்” என, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட், அறைகூவல் விடுத்துள்ளார்.

தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் இனமுறுகல்களை ஏற்படுத்தும் விதமாக ஏற்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த முன்னாள் முதலமைச்சர்,

“ஒரு சில நாட்களுக்குள்ளாக, கிரான், வாழைச்சேனைப் பகுதிகளில், சிறுபான்மைச் சமூகங்களிடையே முறுகல்களை ஏற்படுத்தும் விதமான சில சம்பவங்கள் இடம்பெற்றன.

“அதன் தொடர்ச்சியாக, இன்னும் சில பகுதிகளிலும் இன முறுகல்களை ஏற்படுத்து விதமான, இன ரீதியான துவேசங்களைக் கிளறிவிடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

“இந்த நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக, மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு, நான் யோசனை முன்வைத்துள்ளேன்.

“மட்டக்களப்பில் தற்போது நிலவும் முறுகல்கள், தொடர்ந்தும் வேறு இடங்களில் இடம்பெறாவண்ணம் பாதுகாப்புகளை அதிகரிக்குமாறும், பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளேன்.

“பொலிஸாரின் ஒத்துழைப்புடன், மாவட்டத்தின் ஒவ்வொரு பகுதியிலும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், ஆன்மீகத் தலைவர்கள், அரசியல்வாதிகள், இன ஐக்கிய ஆர்வலர்கள் ஆகியோரின் பங்குபற்றுதலோடு, நல்லிணக்க ரீதியான உரையாடல்களை முன்னெடுத்து, இனமுறுகல்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு, பிரதிப் பொலிஸ்மா அதிபரை நான் கேட்டுக்கொண்டேன்,

“அரசியல் சதிக்காரர்களின் சுயலாப நிகழ்ச்சிநிரலுக்குள் சிக்கிக் கொள்ளாமல், உணர்ச்சிவசப்படாமல், சிறுபான்மைச் சமூகங்கள் மிகுந்த அவதானத்துடன் நடந்து கொள்ள வேண்டும்.

“இது இந்த நிலைமைகளின் யதார்த்தத்தை மக்களுக்கு உணர்த்தி, இவ்வாறான சதிகளுக்குப் பின்புலத்தில் உள்ளவர்களை மக்களின் துணையுடன் அடையாளங்காணுவதற்கு உதவியாக அமையும்.

“சில வஞ்சகர்கள், இனங்களிடையே முறுகல்களை ஏற்படுத்தி, குளிர்காய நினைக்கின்றனர். அத்துடன், தற்போது புதிய அரசமைப்புக்கான இடைக்கால அறிக்கை குறித்த விவாதங்கள் இடம்பெற்று வருகின்றன.

“இவற்றைக் குழப்புவதற்காகவே, சிறுபான்மையினரிடையே மோதல்களை ஏற்படுத்தி, 'இவர்களிடையே ஒற்றுமையில்லை. இவர்களின் மாகாணங்களுக்கு அதிகாரங்கள் வழங்கினால், இவர்களுக்குள்ளேயே பிரச்சினைகள் எழும். எனவே, இவர்களுக்கு அதிகாரங்களை வழங்கத் தேவையில்லை' என, இனவாதிகள் கூறுவதற்கான சூழ்நிலையை, நாமே ஏற்படுத்திக் கொடுத்துவிடக் கூடாது” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X