2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

சுயலாப தலைமைகளினால் 'நம்பிக்கை தகர்ந்துவிட்டது'

Princiya Dixci   / 2017 ஜனவரி 10 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ்த் தலைமைகளும், தென் இலங்கை அரசியல் தலைமைகளும், தமிழ் மக்களுக்கு வழங்கிய எந்த வாக்குறுதிகளையும் கடந்த காலங்களில் நிறைவேற்றவில்லை. அவ்வாறான சூழலே தமிழ் மக்களின் நம்பிக்கையை தகர்த்துவிட்டுள்ளது என ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்ற அரசியல் தீர்வானது, நாட்டை பிளவுபடுத்தும் தீர்வல்ல. ஐக்கிய இலங்கைக்குள் அனைத்து இன மக்களும் கௌரவமாகவும், சமத்துவமாகவும், தத்தமது தனித்துவங்களுடனும் வாழ்வதற்கான அரசியல் அதிகாரப் பகிர்வையே தமிழ் மக்கள் விரும்புகின்றார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளையும், அர்த்தமுள்ள தேசிய நல்லிணக்கத்தின் அவசியத்தையும், தென் இலங்கை கட்சிகளுக்கு தெளிவுபடுத்தும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சந்திப்புக்களின் தொடர்ச்சியாக, லிபரல் கட்சியைச் சேர்ந்த பிரதிநிதிகளுடனான சந்திப்பு நடைபெற்றது.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கொழும்பு அலுவலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், டக்ளஸ் தேவானந்தா தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், புதிய தேர்தல் திருத்தச் சட்டத்தில் சிறிய கட்சிகளுக்கும், சிறுபான்மை கட்சிகளுக்கும் ஏற்படக்கூடிய சாதகங்கள், பாதகங்கள் குறித்து ஆராயவேண்டும்.

சிறிய கட்சிகளுக்கிடையேயும், சிறுபான்மை கட்சிகளுக்கிடையேயும், தேசிய அரசியல் முக்கியத்துவமான விடயங்களில் பொது வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஒற்றுமை இருக்க வேண்டும். ஒற்றுமையாகச் செயற்படுவதன் ஊடாகத்தான் சிறிய கட்சிகள் சாதகமான வெற்றிகளைப் பெறமுடியும். சாதாரண மக்களை இனவாத ரீதியாகத் தூண்டிவிட்டு அதில் அரசியல் ஆதாயம் தேடிக் கொள்வோர், பொது மக்களின் நலன் கருதி செயற்படுவதில்லை. தேர்தல் காலங்களில் வாக்குகளை அபகரிப்பதற்காகவே மக்களைத் தேடி வருகின்றார்கள்.

மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளும், நாளாந்தப் பிரச்சினைளும் தீராமல் இருப்பதற்கு, தேர்தல் காலங்களில் வாக்குறுதிகளை வழங்கி வாக்குகளை அபகரித்து பதவிகளைப் பெற்றுக் கொண்டு, பதவிச் சுகங்களில் மக்களை மறந்து இருக்கும் அரசியல் தலைமைகளே காரணமாணவர்கள் என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்துவது இன்றைய நிலையில் அவசியமாகும் என்றும் சுட்டிக்காட்டினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X