2025 மே 06, செவ்வாய்க்கிழமை

தமிழ் அரசியல் கைதிகள் குடும்பத்துடன் இணைந்திருக்க வேண்டும் : ஜனா

Kanagaraj   / 2015 ஒக்டோபர் 17 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா

ஆயிரக்கணக்கானோர் சிறையில் அடைத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் இந்த காலத்தில் 217அரசியல் கைதிகள்தான் சிறைச்சாலையில் இருப்பதாக அரசாங்கம் கூறியிருப்பது மனவேதனையை அளிக்கின்றது. தற்போதும் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டு அவர்களும் தங்களுடைய குடும்பத்தினருடன் இணைந்திருக்வேண்டும் என்பதே எமது அவா என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம்(ஜனா) தெரிவித்தார்.

இலங்கை சிறைச்சாலைகளில் தமிழ் அரசியல் கைதிகள் மேற்கொண்டுவந்த உண்ணாவிரத போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலய முன்றிலில் நடைபெற்றுவந்த அடையாள உண்ணாவிரத போராட்டம் பிற்பகல் 1.00மணியுடன் நிறைவுக்கு வந்தது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரிடம் ஜனாதிபதி வழங்கிய உறுதிமொழியையடுத்து சிறைச்சாலைகளில் உண்ணாவிரதமிருந்த அரசியல் கைதிகள் தங்களது உண்ணாவிரதப் போராட்டத்தினை தற்காலிகமாக கைவிட்டுள்ளனர்.

இந்த நிலையில், மட்டக்களப்பில் காலை ஆரம்பிக்கப்பட்ட அடையாள உண்ணாவிரத போராட்டமும் தற்காலிகமாக பிற்பகல் 1.00மணியுடன் நிறைவுபெற்றது.

இந்த அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழ்த் தேசியக்  கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள்,கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் உட்பட சிறைகளில் உண்ணாவிரத போராட்டத்தினை மேற்கொண்டுவரும் சிறைக்கைதிகளின் குடும்பத்தினரும் இந்த போராட்டத்தில் இணைந்துகொண்டிருந்தனர்.

உண்ணாவிரத நிறைவு தொடர்பில் கருத்து தெரிவித்த இன்றைய உண்ணாவிரத போராட்டத்தின் ஏற்பாட்டாளரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம்(ஜனா),

இலங்கையின் சிறைச்சாலைகளில் உள்ள அரசியல் கைதிகள் தங்களது விடுதலையை வலியுறுத்தி நடாத்திய உண்ணாவிரத போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழ் உணர்வாளர்களும் இணைந்து இந்த அடையாள உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்தோம்.

பூனைக்கு மணி கட்டுவது யார் என்ற நிலையில்தான் நான் தமிழ் தேசிய அரசியல்வாதிகளையும் உணர்வாளர்களையும் அழைத்து இந்த அடையாள உண்ணாவிரத போராட்டத்தினை முன்னெடுத்தோம்.

மட்டக்களப்பில் நடாத்தப்பட்ட இந்த போராட்டத்தில் அதிகளவான உணர்வாளர்கள் கலந்துகொண்டனர்.

அந்தவகையில் மட்டக்களப்பில் நான்கு மணிவரையில் நடைபெறவிருந்த உண்ணாவிரத போராட்டம் 1.00மணியுடன் தற்காலிகமாக நிறுத்தப்படுகின்றது. ஜனாதிபதி வழங்கிய உறுதி மொழிகளின் பிரகாரம், சம்பந்தன் கூறியதன் அடிப்படையில், 07ஆம் திகதிக்குள் எங்களது அரசியல் கைதிகளுக்கு நல்ல தீர்வு கிடைக்காவிட்டால் அவர்கள் போராட்டத்தினை தொடர்வதாக கூறியிருக்கின்றார்கள். அப்போதும் அவர்களுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்.

கடந்த கால யுத்தம் காரணமாக ஆயிரக்கணக்கானோர் காணால்போனநிலையில் நாங்கள் இன்னும் தேடிவருகின்றோம். ஆயிரக்கணக்கானோர் சிறையில் அடைத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் இந்த காலத்தில் 217அரசியல் கைதிகள்தான் சிறைச்சாலையில் இருப்பதாக அரசாங்கம் கூறியிருப்பது மனவேதனையை அளிக்கின்றது.

இருந்தபோதிலும் அந்த கைதிகளாவது விடுதலைபெறவேண்டும் அவர்களின் குடும்பங்களுடன் அவர்கள் இணையவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X