2025 மே 13, செவ்வாய்க்கிழமை

தமிழ் மக்களுக்கு சிறந்த தீர்வு கிடைக்கும்போது எங்களுடைய கட்சி ஆதரவு அளிக்கும்: ரிஷாட்

Suganthini Ratnam   / 2016 பெப்ரவரி 29 , மு.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்

தமிழ் மக்களுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய சிறந்த  தீர்வு கிடைக்கும்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விட, எங்களுடைய கட்சி ஒரு படி மேலாகச் சென்று அதற்கு ஆதரவு அளிக்குமென கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.  

மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடிப் பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (28) மாலை நடைபெற்ற சதொச விற்பனை நிலையத் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 'இந்த மாவட்டத்திலுள்ள அரசியல்வாதிகள் தேர்தல் காலங்களில் தங்களின் நலனுக்காக இனவாதங்களை உண்டு பண்ணி அரசியலில் இலாபம் ஈட்டுகின்றனர்.

தமிழ் மக்கள் முப்பது வருடங்கள் ஏமாந்தது போதும். இனியும் நீங்கள் அடிமை வாழ்க்கை வாழக்கூடாது' என்றார்.

'தமிழ் அரசியல் தலைவர்களும் முஸ்லிம் அரசியல் தலைவர்களும் முன்னர் பிரிந்திருக்கவில்லை. முஸ்லிம் அரசியல் தலைவர்களை, தமிழ் அரசியல் தலைவர்கள் இணைத்துக்கொண்டே அரசியல் செய்தார்கள். ஒரு காலகட்டத்தில் பிரிந்தபோது, இந்த நாட்டின் பல பாகங்களிலும் செறிந்து வாழ்கின்ற முஸ்லிம் மக்களின் நலன் கருதி மறைந்த எம்.எச்.எம்.அஷ்ரப்  தனியான கட்சியொன்றை ஆரம்பித்திருந்தார்.  

 'நாங்கள் எவருக்கும் எதிரானவர்கள் அல்லர். இந்த நாட்டில் தீர்வு வழங்கப்படும்போது அது ஏற்றுக்கொள்ளக்கூடிய, நியாயமான, நீதியான தீர்வாக இருப்பின் அதனை நாங்கள் கேட்பதற்கு, பெற்றுக்கொள்வதற்கு, அதற்காக போராடுவதற்கு எங்களின் கட்சி தயாராக உள்ளது. ஆனால், இனங்களுக்கும் மதங்களுக்கும் இடையில் பிளவுகளை ஏற்படுத்தி இரத்த ஆறு ஓடுவதை தாங்குகின்ற சக்தி இந்த நாட்டிலுள்ள எந்தெவொரு இனத்துக்கும் கிடையாது. இழக்க வேண்டிய எல்லாவற்றையும் இழந்துவிட்டோம். முப்பது வருட வரலாற்றில் எதனை பெற்றுள்ளோமெனக் கேட்டால் இழந்தவைகளே அதிகம்.   

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இருக்கலாம். தேசிய நல்லாட்சியாக இருக்கலாம் தமிழ் மக்களுக்கு நல்ல தீர்வைக்; கொண்டுவரும்போது, த.தே.கூ. வை விட  எங்களுடைய கட்சி ஒரு படி மேலாகச் சென்று அதற்கு ஆதரவு அளிக்கும். அது சம்பந்தமாக பேசுவதற்கு அவற்றைப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதற்கு தயாராக உள்ளோம்; என்பதை நான் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்' எனவும் அவர் மேலும் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X