2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

நவக்கிரி நீர்ப்பாசன சிற்றூழியர்கள் 14 பேரின் நிரந்தர நியமனங்கள் இரத்து

Suganthini Ratnam   / 2017 ஏப்ரல் 05 , மு.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏஹுஸைன்

இரத்துச் செய்யப்பட்டுள்ள தங்களின் நிரந்தர  நியமனங்களை மீளப் பெற்றுத்தருமாறு நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நவகிரிப் பிரதேச சிற்றூழியர்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நவகிரிப் பிரதேச சிற்றூழியர்கள் 14 பேரின் நிரந்தர நியமனங்கள் கடந்த ஜனவரி 31ஆம் திகதியுடன் இரத்துச்  செய்யப்பட்டுள்ளதாகக் கூறி கொழும்பு தலைமைக் காரியாலயத்திலிருந்து கடிதம் கிடைத்துள்ளது என பாதிக்கப்பட்ட சிற்றூழியர்கள்; தெரிவித்தனர்.

தங்களுக்கு மீண்டும் நியமனங்களை வழங்குமாறு கோரி ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் வி.மகேஸ்வரன் மூலமாக ஜனாதிபதி, பிரதமர், நீப்பாசன அமைச்சர் ஆகியோருக்கு இன்று (5) கடிதம் அனுப்பியுள்ளதாகவும் அவர்கள் கூறினர்.

அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,  '2002ஆம் ஆண்டு சமயாசமய அடிப்படையில் வேலையில் இணைந்த எங்களுக்கு, 2014ஆம் ஆண்டு ஒக்டோபர் 24ஆம் திகதி நிரந்தர நியமனங்கள் கிடைத்தன. எனினும், தற்போது எங்களின் நியமனங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளமையால் நாம் பாதிக்கப்பட்டுள்ளோம்.

2013ஆம் ஆண்டு ஒக்டோபர் முதல் 2014ஆம் ஆண்டு  ஒக்டோபர் வரையான காலத்தில் 180 நாள் கணக்கிடப்பட்டு அதற்குள் உள்ளடங்காதவர்களே இவ்வாறு நிரந்தர நியமனத்திலிருந்து இரத்துச்  செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த 180 நாள் காலப்பகுதியானது  எமக்கு அதற்கு முந்திய வருடங்களில் பூர்த்தியாகி  இருக்கிறது.

நிரந்தர நியமயனங்களைப்; பெற்ற ஊழியர்கள் என்ற அடிப்படையில் நாம்; வங்கிகளிலிருந்து கடன் பெற்றுள்ள நிலையில், தற்போது எங்களின் நியமனங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதால், வங்கிக் கடனை மீளச் செலுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.  அத்துடன், எங்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.

2010ஆம் ஆண்டு மட்டக்களப்பில் ஏற்பட்ட பாரிய வெள்ள அனர்த்தத்தின்போ, நவகிரிக்குளம் உடைப்பெடுக்க இருந்த தறுவாயில், இராணுவத்தினருடன் இணைந்து  மண்மூடைகள் கொண்டு அணையைப் பலப்படுத்தி மாவட்டத்தில் ஏற்படவிருந்த பாரிய அனர்த்தத்தை தவிர்ப்பதற்கு நாம் உழைத்தோம். இவ்வாறு அர்ப்பணித்து உழைத்த எங்களின் நிரந்தர நியமனங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளமை  மன வேதனையை  ஏற்படுத்தியுள்ளது. எனவே, எங்களின் மேற்படி பிரச்சினைக்கு தீர்வு கிடைக்க வேண்டும்' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .