2025 மே 06, செவ்வாய்க்கிழமை

நவம்பர் 7 இளைஞர் நாடாளுமன்றத் தேர்தல்

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 18 , மு.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்,மாணிக்கப்போடி சசிகுமார்,ஏ.எச்.ஏ.ஹுஸைன்

இளைஞர் நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 7ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தேசிய சேவைகள் இளைஞர் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் எம்.எல்.எம்.என்.நைறூஸ் தெரிவித்தார்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர், 'இளைஞர்களை ஆளுமையுடைய இளைஞர் சக்தியாக மாற்றுவதற்காக புதிய வேலைத்திட்டங்களுடன் இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படவுள்ளனர். இம்முறை இளைஞர் நாடாளுமன்றத் தேர்தல் தொகுதி ரீதியாக நடைபெறவுள்ளது. இதற்காக எதிர்வரும் 28ஆம் திகதி நியமனப்பத்திரங்கள் கோரப்பட்டுள்ளன' என்றார்.

'மேலும், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 03 தொகுதிகளை உள்ளடக்கி 02 தமிழ் இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர்களையும்; ஒரு முஸ்லிம் இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினரையும் தெரிவுசெய்யுமாறு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்துக்கு நாம் பரிந்துரைத்துள்ளோம்.

கடந்த ஆட்சிக்காலத்தில் ஒரு பிரதேசத்துக்கு ஒரு இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் தெரிவு இடம்பெற்றது. ஆனால் இம்முறை அவ்வாறில்லாமல், 225 உறுப்பினர்களைக் கொண்ட இளைஞர் நாடாளுமன்றத்துக்கு தொகுதி அடிப்படையில் 160 தொகுதிகளுக்கும் 160 இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்தல் அடிப்படையிலும் மீதியாகவுள்ளவர்கள் போனஸ் அடிப்படையில் பல்கலைக்கழக மாணவர்கள், பாடசாலை மாணவத் தலைவர்கள்  தெரிவுசெய்யப்படவுள்ளனர். அத்துடன், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிப்பாளர் நாயகம் மற்றும் அமைச்சர்களின் சிபாரிசின் அடிப்படையிலும் மாற்றுத்திறனாளியான இளைஞர்கள், சட்டத்துறை மாணவர்களும் இதற்கு தெரிவுசெய்யப்படவுள்ளனர். இதற்காக இவர்களுக்கு நேர்முகப்பரீட்சை நடத்தப்படும்.

இந்த இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர்களை சக்தியுடையவர்களாக மாற்றுவதற்கு ஒவ்வொரு இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினருக்கும் ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவிலும் இளைஞர் சக்தி என்ற பெயரில் 02 வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதற்கான நிதியொதுக்கீடு செய்யப்படும். ஒவ்வொரு வேலைத்திட்டமும்; ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதன்போது, அப்பிரதேச செயலகப் பிரிவில் முக்கியமென்று இனங்காணப்படும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும்'என அவர் தெரிவித்தார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X