2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

நொச்சிமுனையில் இளம் குடும்பஸ்தர் கொலை; மனைவி கைது

Suganthini Ratnam   / 2016 செப்டெம்பர் 08 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்;தீன், ஏ.எச்.ஏ.ஹுஸைன், வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு, காத்தான்குடிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நொச்சிமுனைக் கிராமத்தில் இன்று வியாழக்கிழமை அதிகாலை வேளையில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, அவரது மனைவியை சந்தேகத்தின் அடிப்படையில்  கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வெள்ளத்தம்பி மகேஸ்வரன் (வயது 26) என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.

26 வயதுடைய இவரது மனைவி, நஞ்சு அருந்திய நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாகவும் இந்நிலையிலேயே அவரைக் கைதுசெய்துள்ளதுடன்,  இவர் பொலிஸாரின் கண்காணிப்புடன் சிகிச்சை பெற்றுவருவதாகவும் பொலிஸார் கூறினர்.

மேற்படி கிராமத்திலுள்ள வீடொன்றில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தமக்குக் தகவல் கிடைத்தது. இதனை அடுத்து, அங்கு சென்று சடலத்தை மீட்டுள்ளதுடன், அச்சடலத்தில் வெட்டுக்காயங்கள் காணப்படுவதாகவும் பொலிஸார் கூறினர்.

வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொத்தியாபுரம் கிராமத்தைச் சேர்ந்த இவர்கள் இருவரும் திருமணம் முடித்து ஒரு வருடமாவதுடன், நொச்சிமுனைக் கிராமத்தில் வாடகை வீட்டில் இவர்கள் வசித்துவந்துள்ளனர்.  

இந்நிலையில், இவர்கள் இருவருக்கும் பிள்ளைகள் இல்லையென்பதுடன், இவர்கள் இருவருக்குமிடையில் அவ்வப்போது தகராறு இடம்பெற்று வந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இவர்களின் வீட்டில் அவ்வப்போது சண்டை பிடிக்கும் சத்தம் கேட்பதுடன், வழமைபோன்று நேற்றுப் புதன்கிழமை இரவும் சண்டையிடும் சத்தம் கேட்டதாகவும் அயலவர்கள் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X