2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

‘பல்லின, பல் சமயத்தவர்களுக்கு இடையிலான கலந்துரையாடல்’

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2018 செப்டெம்பர் 24 , பி.ப. 02:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

இனங்களுக்கிடையில், மதங்களுக்கிடையில் எழும் பல்வேறு பிரச்சினைகளையும் முரண்பாடுகளையும் இல்லாமலாக்கவே, தேசிய சமாதானப் பேரவையால், பல்லின, பல் சமயத்தவர்களுக்கிடையிலான கலந்துரையாடல் திட்டம் ஆரம்பிக்கப்பட்டதென, தேசிய சமாதானப் பேரவையின் திட்ட முகாமையாளர் சம்சுதீன் ஷாபி நயாஜ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய சமாதானப் பேரவையால் முன்னெடுக்கப்படும், “இலங்கையில் அனைத்து இனங்களுக்கும் அனைத்து மதங்களுக்குமிடையிலான மாதாந்தக் கலந்துரையாடல்” நிகழ்வில்இன்று (24) உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வு, மட்டக்களப்பு மாவட்ட சர்வமதப் பேரவையின் இணைப்பாளர் இராசையா மனோகரன் தலைமையில் நடைபெற்றது.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய திட்ட முகாமையாளர் சம்சுதீன் ஷாபி நயாஜ், இதய சுத்தியுடன் இனங்களுக்கிடையில் மதங்களுக்கிடையில் பரஸ்பர கலந்துரையாடல்கள், கிரமமான முறையில் இடம்பெறுமாயின், எப்பொழுதும் சமூகங்களுக்கிடையிலான முரண்பாடுகளைத் தீர்க்க முடியுமென்றார்.

உச்ச அரசியல் அதிகார மட்டத்தால் தீர்க்க முடியாமல் போகின்ற விடயங்களைக் கூட, உள்ளூர் கிராம மக்களிடம் காணப்படும் சமாதானத்துக்கான கொள்ளளவால் தீர்த்துவிட முடியுமென்றும், அவர் திடம்படத் தெரிவித்தார்.

அந்தந்தப் பிரதேசங்களில் அவ்வப்போது நிகழும் அல்லது தூண்டி விடப்படும் சம்பவங்கள் குறித்து, சர்வமதச் செயற்பாட்டாளர்கள் முன்னாயத்தத் தடுப்புச் செயற்றிறனோடு இருந்தால், ஏற்படப்போகும் அழிவுகளை முடிந்தளவு தடுத்து நிறுத்த முடியுமெக் குறிப்பிட்ட அவர், பல்வேறுபட்ட முரண்பாடுகளும் இன்னோரன்ன பிரச்சினைகளும், சிலவேளை ஒரு நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில், குழப்பக்காரர்களால் செய்யப்படுகின்றன எனவும், இதற்கு பல்வேறு அரசியல், இனவாத, மதவாத, பொருளாதார, வன்மைவாதக் காரணிகள் பின்புலமாக இருக்கலாமெனவும் தெரிவித்தார்.

மேலும், இவற்றை முன்கூட்டியே அறிந்து எதிர்வினையாற்றுவதன் மூலம், ஏற்படப் போகும் அழிவுகளையும் குழப்பங்களையும் பின்விளைவுகளையும் சமயோசிதமாகத் தடுத்துக்கொள்ள முடியுமென்றும், அத்தகைய சூழ்நிலையை அடைந்து கொள்ள, மனந்திறந்த புரிந்துணர்வுடனான பல்சமய, பல்லினக் கலந்துரையாடல்கள் அவசியமென்றும், அவர் வலியுறுத்தினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .