2025 மே 19, திங்கட்கிழமை

‘பிரச்சினைகளை தீர்ப்பதற்கு வேறுபட்ட கொள்கைகளை கையாளவேண்டும்’

வா.கிருஸ்ணா   / 2018 பெப்ரவரி 28 , மு.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

“கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களுக்கு உருவாகியுள்ள பல்வேறு பிரச்சினைகளை தீர்ப்பதற்கு வேறுபட்ட அரசியல் கொள்கைகளை கையாளவேண்டும்” என, மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

கிழக்கில் உள்ள தமிழ் அரசியல் தலைமைகள் தங்களுக்குள் உள்ளமுரண்பாடுகளையும் பகைமைகளையும் மறந்து ஓரணியில் நிற்கும்போதே, கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் இருப்பையும் மக்களையும் பாதுகாக்கமுடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

முட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட சவுக்கடி, சிவபுரத்தில் அமைக்கப்படவுள்ள பல்நோக்கு மண்டபத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு, நேற்று முன்தினம் நடைபெற்றது.

மீள்குடியேற்ற கிராமமான இக்கிராமத்தில் இதுவரையில் ஒரு பொதுக்கட்டடம் அமைக்கப்படாத காரணத்தால் தகரக்கொட்டகையொன்றிலேயே, முன்பள்ளி மற்றும் பொது நிகழ்வுகள் நடத்தப்பட்டுவந்தன.

இப்பகுதியில் சுமார் 90 குடும்பங்கள் வசித்துவரும் நிலையில் இதுவரையில் இப்பகுதி மக்களின் அடிப்படை வசதிகள் இல்லாத நிலையிலேயே இருந்துவருகின்றனர்.

இந்த நிலையில் இப்பகுதி மக்கள் தமது நிலமைகள் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரனின் கவனத்துக்கு கொண்டுவந்ததையடுத்து, குறித்த பகுதியில் முதல் கட்டமாக பொதுக்கட்டடம் ஒன்றை அமைப்பதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளார்.

இதன்கீழ் குறித்த பகுதியில் அமைக்கப்படவுள்ள பல்தேவைக்கட்டடத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு நடைபெற்றது.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் தெரிவித்ததாவது,

“இப்பகுதியில் உள்ள மாணவிகள் குடியிருப்பில் உள்ள பாடசாலைக்கு செல்லும்போது பல இடங்களில் பல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். சவுக்கடி பாடசாலையினை கா.பொ.த.சாதாரணதரம் வரையில் தரமுயர்த்துவதன் மூலம் இப்பகுதி மாணவர்கள் இங்கு கல்வி கற்கும் வாய்ப்பினைப்பெறமுடியும்.

“எமது மக்களின் தேவைகளை கருத்தில்கொண்டு நாங்கள் இணைந்துசெயற்படவேண்டும்” என்றார்.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன், பிரதேச கிராம சேவையாளர், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X