Suganthini Ratnam / 2016 பெப்ரவரி 14 , மு.ப. 08:19 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஆட்சிக்காலத்தில் சிறந்த தீர்வுத்திட்டம் கொண்டுவரப்பட்ட நிலையில், அது மக்கள் விடுதலை முன்னணி மற்றும்; ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி ஆகியோரால் கிழித்து தீயிட்டுக் கொழுத்தப்பட்டது. அன்று அந்தத் தீர்வுத்திட்டத்தை கிழித்தெறிந்தவர் இன்று புதிய தீர்வுத்திட்டத்தை தயாரிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளமை விதியின் செயற்பாடாகுமென
மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்தின் திட்டப் பணிப்பாளர், சட்டத்தரணி லயனல் குருகே தெரிவித்தார்.
நல்லாட்சி அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும் புதிய அரசியலமைப்பு திருத்தச்சட்டம் தொடர்பில் பொதுமக்களின் கருத்துகளை வழங்கும் வகையில் அவர்களை அறிவுறுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பில் அறிவுறுத்தும் நடவடிக்கை மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ. மண்டபத்தில் சனிக்கிழமை (13) மாலை நடைபெற்றபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 'இந்த நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் மூன்று அரசியலமைப்புகளின் கீழ் ஆட்சிகள் நடைபெற்றுள்ளன. ஆனால், அவற்றினால் மக்களுக்கு எந்த நன்மையும் ஏற்படவில்லை' என்றார்.
மேலும், இலங்கை -இந்திய தீர்வுத்திட்டம் மூலம் இந்த நாட்டில் சிறுபான்மை மக்களுக்கு சிறந்த தீர்வொன்று முன்வைக்கப்பட்டது. அதனை சில தமிழ்த் தலைவர்களும் பேரினவாதிகளும் எதிர்த்தனர். ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு சாராரும் எதிர்த்தனர். எனினும், அந்த தீர்வுதிட்டம் மூலம் மாகாணசபை முறைமையொன்று இந்த நாட்டில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. அதன் மூலம் இன்று மாகாண சபை பற்றி கதைக்கப்படுகின்றது.
இன்று ஒரு தீர்வுத்திட்டம் தொடர்பாக கதைக்கப்படுகின்றது. அது தொடர்பில் அனைத்துத் தரப்பினரின் கருத்துகளும் பெறப்படுகின்றன. அனைத்துத் தரப்பினரையும் ஒன்றுபடுத்தி சிறந்ததொரு அரசியல் தீர்வை முன்வைக்கமுடியும்.
கடந்த காலத்தில் அ.அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவராகியபோது, தெற்கில் பல போராட்டங்கள் பேரினவாதிகளினால் முன்னெடுக்கப்பட்டன. ஆனால், தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராகியபோது எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்கப்படவில்லை. மாறாக, பெரும்பான்மையின மக்கள் வாழ்த்துத் தெரிவித்தனர்.
தற்போதைய நிலையில் பெரும்பான்மையின மக்கள் மத்தியிலுள்ள இனவாதிகளின் செயற்பாடுகளுக்கு வரவேற்பு அளிக்கப்படுவதில்லை. அதேபோன்று, தமிழ் பேசும் மக்கள் மத்தியிலுள்ள இனவாதிகளின் செயற்பாடுகளையும் தமிழ் பேசும் மக்கள் புறக்கணித்து வருகின்றனர்.
இலங்கையின் அரசியல் வரலாற்றில் முதன்முறையாக மக்களின் கருத்துகளைப் பெற்று அரசியலமைப்பை உருவாக்குவதற்கு மேற்கொள்ளும் நடவடிக்கையை அனைத்து இன மக்களும் வரவேற்றுள்ளதாகவும்' எனவும் அவர் மேலும் கூறினார்.
14 minute ago
21 minute ago
40 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
21 minute ago
40 minute ago
1 hours ago