2025 மே 19, திங்கட்கிழமை

மயானப் பிரச்சினைக்கு தீர்வைத் தருமாறு வேண்டுகோள்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2018 ஜனவரி 23 , பி.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு வாகரையில் கத்தோலிக்கர் அல்லாத கிறிஸ்தவ சபைப் பிரிவுகளைப்  பின்பற்றுவோரின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு மயானம் இல்லாத பிரச்சினையால், அங்கு சமூகக் குழப்பங்கள் ஏற்படுவதைத் தடுத்து பொருத்தமான தீர்வைப் பெற்றுத் தருமாறு, மட்டக்களப்பு மாவட்ட சர்வமதப் பேரவை, மாவட்டச் செயலாளரைக் கேட்டுள்ளது.

இது தொடர்பாக தொடராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த மகஜரொன்றும், மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் மாணிக்கம் உதயகுமாரிடம் இன்று (23) கையளிக்கப்பட்டது.

தேசிய சமாதானப் பேரவையின் மட்டக்களப்பு மாவட்ட சர்வமதப் பேரவைக்கான இணைப்பாளர் இராசையா மனோகரன் தலைமையில் மாவட்ட சர்வமத அமைப்பின் பிரதிநிதிகள், மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் சந்தித்தபோது வாகரையில் ஏற்பட்டுள்ள சமூக அமைதிக்குக் கேடான நிலைமைகளை விளக்கினர்.

இதுதொடர்பாக மாவட்ட சர்வமத அமைப்பினர் மேலும் தெரிவிக்கையில்,

“மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் குறிப்பாக மட்டக்களப்பு, வாகரை பிரதேச செயலாளர் பிரிவில்  கத்தோலிக்கரல்லாத கிறிஸ்தவ சபைகளைச் சேர்ந்த  பிரிவினருக்கென தனியான மயானம் இல்லாததால் அவர்கள் மரணிக்கும் தமது உறவினர்களின் சடலங்களை அடக்கம் செய்வதில் பல்வேறு மனித உரிமை மீறல் பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர்.

“இந்த விடயத்தை மாவட்ட சர்வமதப் பேரவையின் கவனத்துக்குக் கொண்டு வந்திருந்தனர்.

“இது தமக்கு மானசீகமான பல்வேறு உடல் உள ரீதியான தாக்கங்களையும், பொருளாதார இழப்புக்களையும் மனித உரிமைகள் பற்றிய கேள்விகளையும் எழுப்பியுள்ளதனால் இப்பிரச்சினைக்கு நீதி பெற்றுத் தரவேண்டும் என்று பாதிக்கப்படுவோர் மாவட்ட சர்வமதப் பேரவையிடம் கேட்டிருந்தனர்.

“மட்டக்களப்பில் முனைப்புப் பெற்றுள்ள இந்த மதவாத முரண்பாட்டை மேலும் வேறு பிரதேசங்களுக்கும் விஸ்வரூபம் எடுக்க விடாது சமூக அமைதியைப் பாதுகாக்குமாறு நாம் மாவட்டச் செயலாளரிடம் வேண்டுகோள் விடுக்கின்றோம்” என்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X