George / 2016 நவம்பர் 27 , மு.ப. 03:51 - 0 - {{hitsCtrl.values.hits}}

கிழக்குப் பல்கலைக்கழகத்தினுடைய மருத்துவபீடத்தின் 02ஆம், 3ஆம் வருடங்களின் கல்வி நடவடிக்கைகள் யாவும் ஞாயிற்றுக்கிழமை முதல் மறு அறிவித்தல்வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அப்பல்கலைக்கழகப் பதிவாளர் விஸ்வநாதன் காண்டீபன் தெரிவித்தார்.
அத்துடன், முதலாம் வருட மாணவர்கள் 16 பேருக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது. பகிடிவதையில் ஈடுபட்ட மாணவர்களுக்கு துணைபோதல், நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு சரியாக ஒத்துழைக்காமை போன்ற காரணங்களுக்காக இம்மாணவர்களில் 15 பேருக்கு 03 வாரங்களுக்கும் ஒரு மாணவனுக்கு 04 வாரங்களுக்கும் வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது
கடந்த வாரம் மேற்படி பல்கலைக்கழகத்தின் மருத்துவபீட மாணவர்கள் சிலர், பகிடிவதைக்கு உள்ளாக்கப்பட்டமை தொடர்பில் சனிக்கிழமை (26) கூடி ஆராய்ந்த பல்கலைக்கழகப் பேரவை இத்தீர்மானத்தை எடுத்துள்ளது.
இந்நிலையில், மருத்துவபீடத்தின் 2ஆம், 3ஆம் வருட மாணவர்கள் ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணிக்கு முன்னர்; மட்டக்களப்பு பிள்ளையாரடியிலுள்ள கிழக்குப் பல்கலைக்கழக விடுதிகளிலிருந்து வெளியேற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. மீண்டும் இம்மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கை ஆரம்பிக்கப்படுவது தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
மருத்துவபீடத்தின் முதலாம் வருடத்துக்காக கடந்த 15ஆம் திகதி புதிய மாணவர்கள் உள்வாங்கப்பட்ட நிலையில், முதலாம் வருட மாணவர்கள் மீதான பகிடிவதை தொடர்பில் சீர்செய்வதற்கான செயற்பாடுகள் பல தடவைகள்; முன்னெடுக்கப்பட்டபோதும், அதற்கு மாணவர்கள் ஒத்துழைக்காமையாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இந்த விடயம் தொடர்பில் மாணவர்களின் பெற்றோருக்கும் பாதுகாவலர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சீரான கல்வி நடவடிக்கையை உறுதிப்படுத்தும் வகையில் சாத்தியமான சகல நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
இது விடயமாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்து அக்குழுவின் ஆலோசனையைப் பெற்றமைக்கு அமையவே பல்கலைக்கழகப் பேரவை இந்த ஒழுங்கு நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
-ஏ.எச்.ஏ.ஹுஸைன், பேரின்பராஜா சபேஷ், கே.எல்.ரி.யுதாஜித்,வா.கிருஸ்ணா.நல்லதம்பி நித்தியானந்தன்
2 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
21 Dec 2025